சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஷாங்காய் சியாகுவோ என்ற நிறுவனம் கடந்த சனிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், ஸ்டாண்டப் காமெடியரான லி ஹாயோஷி-யின் (Li Haoshi) நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது. அதில் லி ஹாயோஷி தன்னுடைய நாய்களின் நடத்தையை, ராணுவத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசினார். அவர் பேசியது, சீன ராணுவத்துடன் தொடர்புடைய, அதிபர் ஜி ஜின்பிங் சொன்ன முழக்கத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் அரசாங்கம், காமெடியர் லீ ஹாயோஷிக்கு எதிராக அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே, “என்னுடைய நோக்கம் அரசை அவமானப்படுத்துவதல்ல, நகைச்சுவையாக மட்டுமே பேசினேன். என்னுடையப் பேச்சுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் கோருகிறேன்” என காமெடியரான லி ஹாயோஷி தெரிவித்திருந்தார்.
ஆனாலும், அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஷாங்காய் சியாகுவோ நிறுவனத்துக்கு 2 மில்லியன் (ரூ.16 கோடி) அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஸ்டாண்டப் காமெடியன் லி ஹாயோஷி கைதுசெய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சீனாவின் கலாசார அமைச்சகத்தின் பெய்ஜிங் பிரிவு, “ராணுவத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற முழக்கத்தை அவதூறாகப் பேசுவதற்கு எந்தவொரு நிறுவனமும் அல்லது தனிநபரும் சீன ராணுவத்தை ஒரு மேடைக்காகப் பயன்படுத்துவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்திருக்கிறது.