பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பதவி ஏற்பு விழா நாளை (சனிக்கிழமை) பெங்களூருவில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
முதல்-மந்திரி விவகாரம் 4 நாட்களுக்கு பிறகு முடிவு வந்துவிட்டதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்து இருக்கும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொடர் வெற்றியை குவித்த எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையே முக்கிய இலாகாக்களை கைப்பற்ற போட்டா போட்டி போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகன் பிரியங் கார்கேவுக்கு கர்நாடக அமைச்சரவையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண சவதி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுபான்மை சமூகத்தை பிரதிநித்துவப்படுத்தும் விதமாக இஸ்லாமியார்களை அமைச்சர்களாக்க திட்டமிட்டிருப்பதாகவும், தமிழக காங்.பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.எச்.முனியப்பா உள்ளிட்டோரும் அமைச்சர்களாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை சபாநாயகர், துணை சபாநாயகர் பொறுப்பை டி.கே.சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கவும் முடிவு செய்திருப்பதாக தகல்கள் தெரிவிக்கின்றன. முதல்-மந்திரியாக சித்தராமையா நாளை பதவியேற்க உள்ள நிலையில் அமைச்சர்களை தேர்வு செய்யும் வேலையில் காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவரம் காட்டி வருகிறது.
மந்திரி பதவியை எதிர்பார்த்து பல எம்.எல்.ஏ.க்களும் இருப்பதால், 2½ ஆண்டுகளுக்கு சிலருக்கும், அடுத்த 2½ ஆண்டுகளுக்கு மற்றவர்களுக்கும் மந்திரி பதவி கொடுக்கலாமா எனவும் காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.