சென்னை: தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது என்றும் அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் கள்ளச்சாராய ஆறு சர்வ சாதாரணமாக ஓடுகிறது. அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உள்துறையை கையில் வைத்து இருக்கும் முதல்வர் ராஜினாமா செய்ய வெண்டும். செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், பதவி ஆசையில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் ராஜினாமா செய்யப்போவது இல்லை. டாஸ்மாக் கடையில் கூடுதலாக காசு கேட்பதாக சமூக வலைத்தளங்களிலும் வருகிறது. இதை மூடி மறைக்கும் வகையில் செந்தில் பாலாஜி பேசுவதை மக்கள் நம்ப மாட்டார்கள். டாஸ்மாக் மூலமாக மட்டும் அரசு கருவூலத்திற்கு வர வேண்டிய பணம் செந்தில் பாலாஜி மூலமாக ஸ்டாலின் குடும்பத்திற்கு போய்க் கொண்டு இருக்கிறது.
பார் லைசன்ஸ் யாருக்கும் கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் தடை இருப்பதால் யாருக்கும் கொடுக்கவில்லை. ஆனால் பார் எங்கேயாவது நடக்காமல் இருக்கிறதா.. தடுக்கி விழுந்தால் பார் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் பார்களுக்கு நிபந்தனைகள் இருந்தது. கடையை ஒட்டி இருக்கும் பார்கள் மொத்த வருவாயில் 1.5 சதவீதம் டாஸ்மாக்கிற்கு கொடுக்க வேண்டும். அது அரசாங்கத்திற்கு வந்துவிடும்.
ஆனால் தற்போது கரூர் கம்பெனிக்கு போய்க் கொண்டு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையில் மது அருந்திய வாலிபர் என்பவர் சுருண்டு விழுந்து உயிரிழந்து விட்டார். இதை பார்க்கும் போது , தமிழக அரசு மதுபான கடைகளில் கலப்பட சரக்கு விற்பனை செய்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. இதற்கு விடை சொல்ல வேண்டியது அரசின் கடமையாகும்.
தவறு யார் செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினால் தான் உண்மை நிலைமை தெரியவரும். அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வாக ரீதியாக துறையை மேம்படுத்த நினைக்காமல், எப்படியெல்லாம் ஊழல் செய்வது என்பது குறித்து ரூம் போட்டு யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
தமிழகத்தில் மின்துறையை கவனிக்க ஆள் இல்லாமல் ஆங்காங்கே மின்வெட்டு நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின்விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி இப்போது மின்வெட்டு அதிகரித்து இருக்கிறது. தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அவர்களை கைது செய்திருந்தால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்து இருக்காது.
உயிர் பலி ஏற்பட்டதற்கு முழு பொறுப்பு முதல்வர் ஸ்டாலின் தான். ரூம் போட்டு கொள்ளையடிக்கிற அமைச்சர்கள் இருந்தால் நாடு இப்படித்தான் இருக்கும். இந்த அரசு போதையில் தள்ளாடும் அரசு. ஆட்சிக்கு வருவதற்கு முன் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று திமுக கூறியது. அதைத்ததான் நாங்கள் செய்ய வேண்டும் என்று கோரி வருகிறோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.