ஒரு பணக்காரர் உடம்பில் ஒரு பிச்சைக்காரரின் மூளை சேர்ந்தால், அந்தப் பணக்காரரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, சமூகத்திலும் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதே `பிச்சைக்காரன் 2′.
இந்தியாவின் 7வது பெரிய பணக்காரரான விஜய் குருமூர்த்தியின் சொத்துகளை அபகரிக்க அவருடன் இருப்பவர்களே திட்டம் போடுகிறார்கள். அதற்காக, அவரின் ரத்த பிரிவைச் சேர்ந்த ஒரு நபரைத் தேடுகிறார்கள். அப்போது, தொலைந்த தங்கையைத் தேடி அலைந்துகொண்டிருப்பவரான சத்யா என்கிற பிச்சைக்காரர் மாட்டுகிறார். வஞ்சகமாக விஜய் குருமூர்த்தியை துபாய் அழைத்து வந்து, அவரது உடம்பில் சத்யாவின் மூளையை வைத்து அறுவை சிகிச்சை செய்கிறார்கள். சுயநினைவு திரும்பும் சத்யா, தன் உடலைப் பார்த்து அதிர்ச்சியாகிறார். பணக்காரர் உடம்பில் உள்ள பிச்சைக்காரர் என்ன ஆனார், அதனால் சமூகத்தில் நிகழும் மாற்றங்கள் என்னென்ன, அந்தச் சொத்துகள் யாருக்குச் சென்றன, தொலைந்து போன தங்கை கிடைத்தாரா போன்ற கேள்விகளுக்கு ‘க்ரீன் மேட்’டில் க்ராபிக்ஸை நிரப்பி திரைக்கதை அமைத்து பதில் சொல்லியிருக்கிறார் ‘அறிமுக இயக்குநர்’ விஜய் ஆண்டனி.
பணக்காரர், பிச்சைக்காரர், பணக்காரர் உடம்பில் இருக்கும் பாவப்பட்ட பிச்சைக்காரர், பணக்காரர் உடம்பில் இருக்கும் புத்திசாலி பிச்சைக்காரர் எனப் பல தளங்களில் பயணிக்கும் கதாபாத்திரத்தைப் படம் முழுவதும் தாங்க முடியாமல் தாங்கி நம் இரக்கத்தைச் சம்பாதிக்கிறார் விஜய் ஆண்டனி. ஆக்ஷனில் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகிறார்.
கதாநாயகி காவ்யா தாப்பர் வழக்கமான காதலி கதாபாத்திரத்தில் ஆங்காங்கே தலைகாட்டுகிறார். ஆனால், அவருக்கு க்ளைமாக்ஸைத் தவிர வேறு எங்குமே அழுத்தமாக எந்த வேலையும் கொடுக்கப்படவில்லை. சிறுவயது விஜய் ஆண்டனியாகவும், அவரின் தங்கையாகவும் நடித்த சிறுவர் கதாபாத்திரங்கள் கவனிக்க வைக்கின்றன. கில் தேவ், ராதா ரவி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி போன்ற வில்லன்கள் இருந்தும், கில் தேவ் மட்டும் மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், மோகன் ராம் போன்ற துணை கதாபாத்திரங்கள் வரிசையில், யோகி பாபுவும் வந்து சிரிப்பு மூட்டாமல் செல்கிறார்.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் க்ரீன் மேட்டிலேயே எடுக்கப்பட்டு, கிராபிக்ஸில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது. சென்னை சாலைகள், கதாநாயகனின் ஆடம்பர வீடு, அலுவலகம், துபாய் பாலைவனம் என எல்லாமே கார்டூன்களைப் போல கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஷாட்களில் ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் மற்றும் கிராபிக்ஸ் டீம் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம், அல்லது நிஜமான லொக்கேஷன்களிலேயே எடுத்திருக்கலாம். சத்யா கதாபாத்திரத்திற்கான பின்கதை மட்டும் கிராபிக்ஸ் பூச்சுகள் இன்றிருப்பது ஒரு ஆறுதல்.
எந்தக் காட்சியும் முறையான ஃப்ரேம்களிலிருந்து தொடங்காமல், அவசரகதியில் தொடங்கி அவசரகதியில் முடிகின்றன. மேலும், சில ஃப்ரேம்கள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் படத்தொகுப்பாளர் விஜய் ஆண்டனி கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் ஆண்டனி இசையில், ‘கோயில் சிலையே’ பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணியிசையில், ‘பிச்சைக்காரன் தீம்’ இசை மட்டும் பழைய பிச்சைக்காரன் வைப்பை நினைவூட்டுகிறது.
மூளை மாற்று அறுவை சிகிச்சை என சயின்ஸ் பிக்ஷனாகத் தொடங்குகிறது திரைக்கதை. ஆனால், அதன் பின், பணக்காரரின் ஒரே வாரிசான ஹீரோவைக் கொல்ல துடிக்கும் வில்லன்கள் என 90களுக்குச் சென்று, அண்ணன் – தங்கை பாசப் போராட்டம், டபுள் ஆக்ஷன், ஆள் மாறாட்டம் என்பதாக 80களுக்கும் சென்று யூடேர்ன் அடித்து நிற்கிறது. இதுதான் கதை என ஓரளவிற்குப் புரிவதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. எல்லா காட்சிகளும் கிராபிக்ஸ் குவியலுக்குள் திணிக்கப்பட்டுள்ளதால், திரையில் நடக்கும் எதுவுமே பார்வையாளர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளம் கொண்ட பணக்காரர், ஆன்டி – பிகிலி தத்துவம், பிச்சைக்காரர்கள் வாழ்க்கை என இரண்டாம் பாதியிலும் பல்வேறு வழிகளில் திரைக்கதை பயணிக்கிறது. சாமியாரிடம் அறிவுரை பெறும் கதாநாயகன், பிச்சைக்காரர்கள் தங்கும் இடத்தில் கதாநாயகனிடம் தங்கையாகப் பழகும் பெண், அவருக்கு வரும் தொந்தரவுகள், கதாநாயகன் பிச்சைக்காரர் அல்ல பணக்காரர் என போலீஸுக்குத் தெரிய வரும் காட்சி என ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்தில் வரும் காட்சிகள் இதிலும் அப்படியே வருகின்றன. ஆனால், அவை வெறும் காட்சிகளாக மட்டுமே கடந்து போய்விடுகின்றன.
ஏழைகள், பிச்சைக்காரர்கள், பசி, பட்டினி, பணம் எனக் கதாநாயகன் பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார். காவல் நிலையம், நீதிமன்றம், ஆண்டி பிகிலி தொடக்க விழா, நிறுவனத்தின் இயக்குநர்கள் சந்திப்பு எனக் கிடைத்த இடத்தில் எல்லாம் பிபிடியோடு கிளம்பிவிடுகிறார். ஆனால், எந்த இடத்திலுமே ஏழைகள் – பணக்காரர்கள் வேறுபாட்டிற்கான தர்க்கப்பூர்வமான அரசியல் ரீதியிலான விவாதத்தை முன்னெடுக்கவில்லை. மாறாக, கதாநாயகனின் தனிமனித சாகச வாதத்தையே தூக்கிப்பிடிக்கிறது.
முதல் காட்சியிலிருந்தே லாஜிக் ஓட்டைகளும் தன் சேமிப்பு கணக்கைத் தொடங்குகின்றன. ஒரு பெரு நிறுவனம் முதலாளி தோன்றியவுடன் மலிவு விலை தயாரிப்புகளை மக்களின் வசதிக்காகச் சந்தைக்குக் கொண்டு வந்துவிடமுடியுமா, குறைந்த விலைக்கு ஏழைகளுக்கு வீடு கட்டித்தர முடியுமா, அப்பெருநிறுவனத்தின் பங்குதாரர்கள் வேடிக்கை பார்ப்பார்களா, அரசும் இவர்களோடு வேடிக்கை பார்க்குமா என சதுரடிக்கு பதிமூன்று ஓட்டைகள் இருக்கின்றன.
மொத்தத்தில் பழைய ஆள் மாறாட்டக் கதையை சயின்ஸ் ஃபிக்ஷனாக மாற்றி, பின்னர் அதையும் சுமாரான மேக்கிங்கில் அணுகி, ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாகவே முடிந்திருக்கிறது இந்த `பிச்சைக்காரன் 2′.