கொல்கத்தா: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் கலந்து கொள்ளவிருக்கிறார். இத்தகவலை அக்கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெயன் உறுதி செய்துள்ளார்.
கடந்த 10-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கான உள்கட்சி இழுபறிகள் முடிவுக்கு வந்த நிலையில் வரும் 20ஆம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க ஒருமித்த கருத்துடைய பல்வேறு கட்சிகளுக்கும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டும் கூட திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் கட்சியின் மூத்த தலைவர் ககோலி தஸ்திதார் கலந்து கொள்கிறார்.
இது குறித்து திரிணமூல் எம்.பி. டெரக் ஓ ப்ரெயன், “கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா, முதல்வர் மம்மதா பானர்ஜிக்கு தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். சித்தராமையாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் மம்தா திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவையின் துணைத் தலைவர் ககோலி தஸ்திதாரை விழாவுக்குச் செல்ல பணித்துள்ளார்” என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில் அவர், “கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் செலுத்துகிறேன். வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வணக்கம். குமாரசாமியும் சிறப்பாகச் செயல்பட்டார். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேச தேர்தல் வரப்போகிறது. இரு மாநிலங்களிலும் பாஜக தோற்கும். இது முடிவின் ஆரம்பம்” என்று பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து ஒரு பேட்டியில் அவர், “காங்கிரஸ் எங்கெல்லாம் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் போட்டியிடட்டும். அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். ஆனால் அவர்களும் பிற கட்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸுக்கு அவ்வப்போது மம்தா இதுபோன்ற கெடுபிடிகளைக் காட்டிவருகிறார்.