சென்னை: டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது.
மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.