கரூர் : பணி நேரத்தில் புது புடவையை பார்த்துக்கொண்டிருந்த மாநகராட்சி பெண் ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ.!!
தமிழகத்தில் உள்ள மற்ற மாநகராட்சிகளை போலவே கரூர் மாநகராட்சியிலும் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட வரிகள் காட்டாமல் நிலுவையில் உள்ளது. இந்த வரிகளைக் கட்டச் சொல்லி ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து இந்த வரியை வசூல் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மாநகராட்சியில் முன் கூட்டியே வரி செலுத்துபவர்களுக்கு 5% வரி டிஸ்கவுண்டும் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் தங்கள் பணியினை செய்து வந்தனர்.
அப்போது, வரி வசூல் செய்யும் கவுண்டர்களில் இருக்கும் மூன்று பெண் ஊழியர்கள் மற்றும் ஒரு ஆண் ஊழியர் வேலை நேரத்தில் வரி வசூல் செய்வதை நிறுத்தி விட்டு புது புடவையை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இதனால், வரி செலுத்த வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.
சுமார் முப்பது நிமிடத்திற்கு பின்னர் அவர்களை அழைத்து வரியை பெற்றுக்கொண்டனர். இதற்கிடையே வரி வசூல் மையத்தில் ஊழியர்கள் வேலை நேரத்தில் புடவையை பார்த்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.