சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு 2023-24-ம்கல்வி ஆண்டுக்கான அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடப் பங்கீடு குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மருத்துவக் கல்வி இயக்குநர் இரா.சாந்திமலர், தேர்வுக் குழுச் செயலர் முத்துச்செல்வன் மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை படிப்பதற்கு 18 தனியார் கல்லூரிகளில், முதுநிலை பல் மருத்துவம் படிக்க 16 தனியார் கல்லூரிகளும், இளநிலை மருத்துவம் படிக்க 19 தனியார் கல்லூரிகளும், இளநிலை பல் மருத்துவம்படிக்க 20 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் 7 சிறுபான்மையினர் கல்லூரிகள் ஆகும்.
தனியார் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 407, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 385, முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 139, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 157 மற்றும் இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,739, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 1,311, இளநிலை பல் மருத்துவப் படிப்பில்அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,410, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 540 இடங்கள் ஆகும். கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இடப்பங்கீடு தொடரும்.
நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன்,உடனடியாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொடங்க வேண்டும் என்று தனியார் கல்லூரிகளின் நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான் முதல் சுற்றுக் கலந்தாய்வு முடிந்த பின்னரே, மாநிலத்தில் கலந்தாய்வு தொடங்கும். கடந்த ஆண்டு காலதாமதம் ஏற்பட்டது. இந்த ஆண்டு காலதாமதம் ஏற்படாது.
முதல்வரின் அறிவுறுத்தல்படி, நானும், துறையின் செயலாளரும் ஜூன் முதல் வாரத்தில் டெல்லி சென்று, மத்திய சுகாதாரத் துறைஅமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சரை சந்தித்து, தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்புகளின் தேவைகள் குறித்து பேச உள்ளோம்.
நீட் தேர்வு முடிவு வந்தவுடன், உடனே மத்திய அரசு அகில இந்திய கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.