திமுகவை குறிவைத்து பாஜக தீர்மானம்: கோவையில் குழுமிய பாஜகவினர்!

தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் நேற்று (மே19) கோவையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார்.

“பாரதத்தை உலகின் வழிகாட்டியாக மாற்றுவதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக உழைத்து வரும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து, கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கச் செய்து, தூய்மையான நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உறுதி ஏற்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த காலத்தில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி தடை செய்திருந்த தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் அவசரச் சட்டத்திற்குக் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று, சட்டத்தினை நிறைவேற்றி, ஏறுதழுவும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நிரந்தரமாக மீட்டெடுத்து, தமிழரின் மானம் காத்த பிரதமர் மோடிக்கு உலகத் தமிழர்களின் சார்பில், நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டு ஆண்டு காலமாகத் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்து வருகிறது. தடையற்ற மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக, தடையில்லாமல் மின்சார தடையை திமுக அரசு ஏற்படுத்தி வருகிறது. திமுக அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியான தடையில்லாத மின்சாரம் வழங்குவோம் என்கிற உறுதிமொழியைக் காப்பாற்றிட தமிழக முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக வழங்கி, ஆட்சி பொறுப்பேற்றதும், எங்குப் பார்த்தாலும் அரசு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு வருவதும், பெண்களுக்கென்று சிறப்பு மதுபானகூடங்கள் திறக்கப்பட்டு வருவதும், போதாதென்று, டாஸ்மாக் கடைகளுக்குப் போட்டியாகக் கள்ளச் சாராய வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்து 22 நபர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் அனுதினமும் கள்ளச் சாராய மரணங்கள் அரங்கேறி வருகின்றன. குடிக்கும் பழக்கத்தைத் தூண்டி, மக்களின் உயிர் குடிக்கும், திமுக அரசுக்கு, கடுமையான கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில், தமிழ்நாடு பாஜக மாநிலப் பொறுப்பாளர் சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.