2000 ரூபாய் நோட்டுகள்.. கர்நாடகா தேர்தல் தோல்வியை மறைக்கும் தந்திரம்.. மு.க. ஸ்டாலின் அதிரடி ட்வீட்

சென்னை:
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக அடைந்த படுதோல்வியை மறைக்கவே 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் மத்தியில் பெரும் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தாக புள்ளிவிவரங்கள் வெளியாகின. இருந்தபோதிலும், இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என பாஜக கூறி வருகிறது.

இந்நிலையில், நேற்று ஒரு திடீர் அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வரும் 23-ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மிகப்பெரிய தோல்வி திட்டம் என நிரூபணமாகி உள்ளதாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் ஒருபடி மேலே சென்று இதை முட்டாள்தனமான நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

500 சந்தேகங்கள்

1000 மர்மங்கள்

2000 பிழைகள்

கர்நாடக படுதோல்வியை

மறைக்க

ஒற்றைத் தந்திரம்! என ஸ்டாலின் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.