சென்னை: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் சென்னை வீடு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இது குறித்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்போது எல்லாமே இணையம் என்றாகிவிட்ட நிலையில், டெக் சார்ந்து இருக்கும் நிறுவனங்களே டாப் இடத்தில் இருக்கிறது. அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாகவும் டெக் கம்பெனிக்களே இருக்கிறது.
அதன்படி இப்போது உலகின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது அமெரிக்காவின் கூகுள் நிறுவனம். அந்நிறுவனத்தின் சிஇஓ-ஆக இருப்பவர் இந்தியாவைச் சேர்ந்த சுந்தர் பிச்சை.
தமிழ்நாடு: சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர் மதுரையில் பிறந்த நிலையில், அதன் பிறகு அவரது குடும்பத்தினர் சென்னைக்குக் குடியேறினர். சுந்தர் பிச்சை தனது குழந்தைப் பருவத்தையும் பள்ளிப் பருவத்தையும் சென்னையில் தான் கழித்தார். அதன் பின்னரே, அவர் கரக்பூர் ஐஐடியில் படிக்கச் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளியேறினார். அதுவரை அவர் சென்னையிலேயே இருந்தார்.
தனது பள்ளி காலத்தைச் சுந்தர் பிச்சை எந்த வீட்டில் கழித்தாரோ இப்போது அந்த வீடு விற்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியமான குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான அசோக் நகரில் தான் சுந்தர் பிச்சையின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டைச் சுந்தர் பிச்சையின் தந்தை விற்க முடிவு செய்துள்ளார். அதன்படி இதைத் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கும் மணிகண்டன் வாங்கியுள்ளார்.
சுந்தர் பிச்சை வீடு: இந்த வீடு சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்தது என்று தெரிந்தவுடனேயே அந்த இடத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாராம் மணிகண்டன். சுந்தர் பிச்சை நமது நாட்டிற்குப் பெருமையைச் சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட மணிக்கண்டன், இதனால் வீட்டை வாங்க வேண்டும் என அப்போதே முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும், சுந்தர் பிச்சையின் தந்தை அமெரிக்காவில் இருந்ததால் அவர் திரும்பி வர 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வலம் வரும் மணிகண்டன் செல்லப்பா பில்டர்ஸ் மூலம் நகரில் 300 வீடுகளைக் கட்டியுள்ளார். அவர் தான் இப்போது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தங்கிய வீட்டையும் வாங்கியுள்ளார். சுந்தர் பிச்சையின் பெற்றோர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம் தரும் வகையில் இருந்ததாகவும் அவர்கள் சுந்தர் பிச்சை பெயரை எங்கும் பயன்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து பத்திரப்பதிவைச் செய்து கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
கண் கலங்கினார்: சுந்தர் பிச்சையின் தந்தை சம்பாதித்து முதலில் வாங்கிய சொத்து என்பதால் விற்பனை செய்யும் போது சற்று எமேஷ்னல் ஆகிவிட்டார். பத்திரங்களை ஒப்படைக்கும் போது, சில நொடிகள் கண் கலங்கிவிட்டாராம். இருந்த போதிலும், சொன்னபடியே அந்த நேரத்திற்குள் வீட்டை முழுமையாக இடித்து இடத்தை சுந்தர் பிச்சையின் தந்தை ஒப்படைத்துவிட்டார்.
சுந்தர் பிச்சை பள்ளி காலத்தைச் சென்னையில் முடித்திருந்தாலும் கூட அதன் பிறகு அவர் சென்னை வருவதே அரிதாக இருந்துள்ளது. இப்போது கூகுள் சிஇஓவாக இருக்கும் அவர், அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவரது பெற்றோரும் பல ஆண்டுகளாகவே சுந்தர் பிச்சையுடன் அமெரிக்காவிலேயே வசித்து வருகின்றனர். இதனால் சென்னையில் இருக்கும் இந்த வீடு பயன்பாடு இல்லாமலேயே இருந்துள்ளது.
என்ன காரணம்: அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசிப்பதால் இந்த வீட்டை தங்கள் குடும்பத்தினர் யாரும் பயன்படுத்தப் போவதில்லை என்பதாலேயே இதைச் சுந்தர் பிச்சையின் தந்தை விற்க முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அடுத்தாண்டு இங்கே கட்டுமான பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் 3 ஆண்டுகளில் வீடு கட்டும் பணிகளை முடிக்க உள்ளதாகவும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை கடந்த 2004இல் கூகுள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு பிரிவுகளில் வேலை செய்த சுந்தர் பிச்சை இப்போது சிஇஓ பதவிக்கு வந்துள்ளார். சுந்தர் பிச்சை கடைசியாக 2021 அக். மாதம் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது ஏர்போர்ட் செல்லும் வழியில் தான் படித்த வன வாணி பள்ளிக்கும் அவர் சென்றிருந்தார்.