சென்னை:
2000 ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு பாஜக மூத்த தலைவர் குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி நேற்று இரவு திடீரென அறிவித்தது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்ததாக புள்ளிவிவரங்கள் வெளியாகின. இருந்தபோதிலும், இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என பாஜக கூறி வருகிறது.
இந்நிலையில், இந்த ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறும் அறிவிப்பை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேபோல, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ரூ.2000 நோட்டுகள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என முதலில் பிரதமர் கூறினார். இப்போதோ 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தால் ஊழல் ஒழிந்துவிடும் என்கிறார். பிரதமராக இருப்பவர் படித்திருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறலாம். பொதுமக்கள் கஷ்டப்படுவது குறித்து அவருக்கு தெரியாது” என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், “பிரதமர் குறித்து கேஜ்ரிவால் இப்படி பேசுவது முறையல்ல. இது அவரது ஆணவத்தின் மொத்த உருவத்தையும் காட்டுகிறது. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், பிரதமர் பதவிக்கென்று மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற தரமற்ற சொல்லாடல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பதிவிட்டுள்ளார்.