'வெளியில் இருந்து மற்றவர்கள் சொல்வது குறித்து எனக்கு கவலையில்லை' – விராட் கோலி

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்சை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்ததுடன் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் பிரகாசப்படுத்தியது.

இதில் ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறுகையில், ‘முக்கியமான ஆட்டத்தில் நான் அடித்த இந்த சதத்தை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். ஐதராபாத் அணி நல்ல ஸ்கோரை எடுத்ததாக நினைத்தேன். ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்று வந்தது. இதனால் நிலைத்து நின்று நல்ல தொடக்கம் அளிக்க வேண்டும் என்று நினைத்தோம். விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என்று நினைத்து பார்க்கவில்லை. பிளிஸ்சிஸ் ஆட்டம் வேறு லெவலில் இருக்கிறது. நான் கடந்த 2-3 ஆட்டங்களில் வலைப்பயிற்சியில் விளையாடியது போல் போட்டியில் பந்தை சரியாக அடித்து ஆடவில்லை. எனவே இந்த ஆட்டத்தில் முதல் பந்தில் இருந்தே தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அடித்து ஆட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

நான் எப்பொழுதுமே முந்தைய ஆட்டங்களில் என்ன நடந்தது என்பதை பார்ப்பது கிடையாது. தாக்கத்தை ஏற்படுத்திய சிறப்பான ஆட்டத்துக்குரிய பாராட்டையும் சில சமயங்களில் எடுத்து கொள்ளமாட்டேன். ஏனெனில் ஏற்கனவே இதுபோல் எனக்கு நானே நிறைய அழுத்தங்களை கொடுத்திருக்கிறேன். வெளியில் இருந்து மற்றவர்கள் சொல்வது குறித்து எனக்கு கவலையில்லை. அது அவர்களுடைய கருத்தாகும். சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பதையே பெருமையாக கருதுகிறேன்.

ஆண்டில் 12 மாதமும் நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஐ.பி.எல். போட்டி முடிந்ததும் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம். எனவே நான் வித்தியாசமான ஷாட்களை ஆடி விக்கெட்டை பறிகொடுக்க விரும்பவில்லை. எப்போதும் எனது ஆட்ட நுணுக்கத்துக்கு உண்மையாக இருக்க விரும்புகிறேன். முக்கியமான ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடுவது எனக்கு மட்டுமின்றி அணிக்கும் நல்ல நம்பிக்கையை கொடுக்கும்.

இந்த சீசனில் நானும், பிளிஸ்சிஸ்சும் இணைந்து ஏறக்குறைய 900 ரன்கள் எடுத்து இருக்கிறோம். டிவில்லியர்சுடன் இணைந்து விளையாடுவது போன்ற உணர்வு பிளிஸ்சிசுடன் சேர்ந்து ஆடுகையில் இருக்கிறது. ஆட்டத்தின் போக்கை உணர்ந்து செயல்படுவதில் இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. உள்ளூரில் ஆடுவது போல் ரசிகர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்தது. எனது பெயரை உரக்க சொல்லி ரசிகர்கள் ஊக்கப்படுத்தினர். எனது ஆட்டம் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் முகம் மலர்வதை விரும்புகிறேன்’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.