சண்டிகர்: போலீசார் போதிய உடற்தகுதியுடன் இருப்பதில்லை என்ற விமர்சனம் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
நமது சமூகத்தில் பெரியளவில் வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வதில் போலீசாருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. மக்கள் நிம்மதியாக இருக்க இரவு பகல் பாராமல் உழைக்கும் போலீசார் நிச்சயம் தேவை.
ஆள் பற்றாக்குறை, போதிய விடுப்பு இல்லாமல் போவது என அழுத்தமான சூழலில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். இந்தச் சூழலிலும் கூட அமைதியான ஒரு சமூகத்தைப் படைக்கவே போலீசார் பெரியளவில் வேலை செய்கிறார்கள்.
போலீசார்: அதேநேரம் போலீசார் மீது விமர்சனங்களும் இல்லாமல் இல்லை. மிருகத்தனமாக தாக்குவது தொடங்கி போலீசார் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி எழும் விமர்சனங்களில் முக்கியமானது போலீசார் பிட்டாக இருப்பது இல்லை என்பது தான். பயிற்சி முடித்து பணியில் சேரும் போது பிட்டாக இருக்கும் போலீசார், அதன் பிறகு அதே உடற்தகுதியை வைத்துக் கொள்வதில்லை என்ற விமர்சனம் இருந்து கொண்டே இருக்கிறது.
இதற்குத் தீர்வு காணும் வகையில் ஹரியானா அரசு இப்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. தகுதியற்ற மற்றும் அதிக எடையுள்ள போலீசாரை களத்தில் இருந்து வேலை செய்யும் துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றுமாறு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் உத்தரவிட்டுள்ளார்.
ஹரியானா போலீசார் தங்கள் உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். அதிக எடை மற்றும் பிட்டாக இல்லாத போலீஸ் அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள்கள் தங்கள் எடையைக் குறைக்கச் சிறப்புப் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு மட்டுமே அவர்கள் மீண்டும் தங்கள் பணியில் சேர முடியும் என்று அந்த எழுத்துப்பூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்சி: மேலும், அந்த உத்தரவில் “ஹரியானா போலீஸில் பல அதிகாரிகள் அதிக எடையுடன் உள்ளனர். அவர்களின் எடை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை நாங்கள் கவனித்துள்ளோம். ஹரியானா போலீசாரின் உடற்தகுதியை மேம்படுத்த, ஓவர் வெயிட் மற்றும் பிட்னஸ் இல்லாத காவலர்களை களப்பணியில் இருந்து மாற்ற வேண்டும். அவர்கள் உடல் எடையைக் குறைத்து உடல் தகுதி பெறும் வரை சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், அசாம் போலீசாரும் இதேபோன்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்து இருந்தனர். அங்கே பிஎம்ஐ அடிப்படையில் பிட்டாக இல்லாத அதிகாரிகளைக் கண்டறிந்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்திய போலீஸ் சர்வீஸ் (ஐபிஎஸ்) மற்றும் அசாம் போலீஸ் சர்வீஸ் (ஏபிஎஸ்) அதிகாரிகள் உட்பட அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உடற்தகுதி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் பிட்டாக இல்லாத போலீசாருக்கு விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) வழங்கப்படும் என்று அசாம் டிஜிபி தெரிவித்துள்ளார்.
3 மாதங்கள் டைம்: உடல் எடையைக் குறைக்க 3 மாதங்கள் டைம் வழங்கப்படும் என்றும் 3 மாதங்களுக்குப் பின்னரும் எடையைக் குறைக்கவில்லை என்றால் விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதேபோல குடிப் பழக்கத்திற்கு அடிமையான 300 போலீசாருக்கும் விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று சமீபத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.