ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் ஒரு பள்ளி குழந்தையை கடத்தும் போது, அதை மஹத் நேரில் பார்த்து விடுகிறார். இதை அருகில் உள்ள மாருதி நகர் காவல் நிலைய ஆய்வாளரான அமித் பார்கவ்விடம் வந்து புகார் தெரிவிக்கிறார். சம்பவ இடத்துக்குச் செல்லும்போது தான் அந்த கும்பலும் காவலர் ஆய்வாளரும் கூட்டாளிகள் எனத் தெரிகிறது.
தப்பி ஓடும் மஹத் அவர்களால் பிடிக்கபட்டு கொல்லப்படுகிறார். கொல்லப்பட்ட மகத்தின் காதலியான வரலட்சுமியும், அவரது 3 நண்பர்களும் சேர்ந்து காவல் ஆய்வாளரையும் மாஃபியா கும்பல் தலைவனையும் காவல்நிலையத்திலேயே வைத்து கொல்லத் திட்டமிடுகிறார்கள். அந்த திட்டம் என்னவானது என்பதுதான் மீதிக் கதை.
கொல்லப்படும் அப்பாவி இளைஞராக மஹத் நடித்துள்ளார். சிறிது நேரம் வந்தாலும் அவர் நடித்த கதபாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
ஆனால் அதற்கு சிறிதும் நியாயம் செய்யாமல் பதட்டப்படும் காட்சிகளிலும், உணர்வுபூர்வமான காட்சிகளிலும் செயற்கைத்தனமான முகபாவங்களே வெளிப்படுத்தியிருக்கிறார் மஹத்.
அவரது காதலியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் வரும் வரலட்சுமி காதலரின் மரணத்தில் ஏற்படும் குழப்பம், கொலைக்கு பின்னால் ஏற்படும் பதட்டம், போலீஸ் மிடுக்கு ஆகியவற்றை சரியாகக் கையாண்டுள்ளார். இவரோடு சேர்ந்து பழிவாங்கும் நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், யாசர் அராஃபத், விவேக் ராஜகோபாலன் நடித்துள்ளனர். இதில் சந்தோஷ் பிரதாப் மட்டுமே சற்று கவனிக்கவைக்கிறார். அவரைக் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
வில்லன்களாக வரும் மாஃபியா கும்பல் தலைவர் சுப்ரமணிய சிவா, காவல் துறை ஆய்வாளராக வரும் அமித் பார்கவும் இன்னும் சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கலாம். கதையின் பாதியில் உயர் அதிகாரியாக அறிமுகமாகும் ஆரவ் விசாரணை செய்யும் காட்சிகளில் கம்பீரமான உடல்மொழியை வெளிப்படுத்தி ஈர்த்தாலும், ஒரேமாதிரியான முகபாவத்தையே படம் முழுக்க வைத்துள்ளார். இதில் வரலட்சுமியை பார்த்து நக்கலாக சிரிக்க வேண்டிய காட்சிகளில் ஆரவ் சிரிப்பது ரொமான்டிக் சிரிப்பை போல தோன்ற வைக்கிறது.
ஆரம்பத்தில் சுவரின் கம்பி வேலியின் மேல் ஒரு சிறுமியின் கை வந்து உதவி கேட்கும் போது என்னவோ நடக்கிறது. அது என்ன? என்று பதட்டத்தை தூண்டும் திரில்லர் உணர்வானது ஆரம்ப காட்சியில் மட்டுமே வந்து முடிந்து விடுகிறது. ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் கொலை என்பதற்கான எந்த விதமான பரபரப்பும் இல்லாமல் காட்சிகள் ஓடுகின்றன. கொலை செய்யப்பட்ட இளைஞரின் காதலர் காவலராக இருக்கிறார். அந்த இளைஞரும் சம்பவம் நடந்ததை வீடியோவாக எடுக்கிறார்.
இருந்தும் காதலருக்கு அனுப்பி அடுத்து என்ன செய்வது எனக் கேட்காமல் இன்னொரு காவல்நிலையத்துக்கு செல்வது, அவர்களிடம் தப்பிக்கும் சந்தர்ப்பத்தில் நண்பர்களுக்கு தொடர்பு கொள்ளாமல் இருப்பது, ஒரு காவல்துறை அதிகாரியே தன் காதலனைக் கொன்றவனைக் கண்டுபிடிக்க காவல்துறையை நம்பாமல் இருக்க என்ன காரணம், ஒரு காவல்நிலையத்தில் வைத்து ஒரு ஆய்வாளர் கொலை செய்யப்படுவதை காவல்துறை இவ்வளவு மெத்தனமாகவா அணுகும் என நிறைய லாஜிக் ஓட்டைகளும் கேள்விகளும் திரைக்கதையில் விரவிக்கிடக்கின்றன.
இரண்டாம் பாதியில் விசாரணைக் காட்சிகள் என விரிகிறது திரைக்கதை. எந்த ஏற்ற இற(ர)க்கமில்லாத தட்டையான காட்சிகளைக் கொண்டு நகர்கிறது. ஒரு கொலையை புலனாய்வு செய்யும் அதிகாரியின் புத்திசாலித்தனத்தை பொறுத்தே பார்வையாளர்கள் திரில்லர் படங்களில் ஈர்க்கப்படுவார்கள். இதில் வரும் விசாரனை அதிகாரி கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமாக இல்லாமல், சாதாரண திருட்டு கேஸை விசாரிப்பதைப் போல விசாரிக்கிறது.
இரண்டு போலீஸ் ஸ்டேஷன், மூன்று வீடுகள் இதைச் சுற்றியே காட்சிகள் நகர்வதால் அதற்குள் என்ன செய்யமுடியுமோ அதை செய்திருக்கிறது சேகர் சந்துருவின் ஒளிப்பதிவு. ப்ரீத்தி பாபுவின் படத்தொகுப்பை பொறுத்தவரை முன் பின் நகரும் திரைக்கதை பாணியை இன்னும் கோர்வையாக ரசிக்கும்படி கோர்க்க முயற்சித்து இருக்கலாம். மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. இருந்தும் பலமே இல்லாத காட்சிக்கு பலமான பின்னணி இசை என்பது படத்தில் ஒட்டாமல் தனியாக தெரிகிறது. பாடல் வரிகளும் எதுகை மோனை போட்டு வலிந்து எழுதியது போல இருப்பதால் ரசிக்கும் படியாக இல்லை.
இறுதிக்காட்சியில் வரும் ட்விஸ்ட்டில் கொஞ்சம் கூட நம்பத்தன்மை இல்லை. ஒரு காவல் ஆய்வாளரை காவல்நிலையத்தில் வைத்தே கொல்ல திட்டம் போதுவது, எதிர்ப்பாராத விதமாக ஒரு கொலை இரண்டு கொலையாக மாறுவது, அதற்கு பின்னான முடிச்சுகள் என எடுத்துக்கொண்ட ஒன்லைன் தரம். ஆனால், அந்த ஒன்லைனை விரிவுப்படுத்தும் போது லாஜிக் ஓட்டைகளாலும், யூகிக்கும்படியான காட்சிகளாலும் அந்த ஒன்லைனின் தீவிரம் நீர்த்து போகச் செய்வதால் படமாக நிற்கவில்லை.