காதல் திருமணங்களில் அதிக மனக்கசப்பு, சகிப்பின்மை ஏற்படுவதாக நாம் பெரும்பாலான கருத்துகளைப் பார்க்க முடிகிறது. ஐந்து, பத்து ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் கூட ஒரிரு ஆண்டுகளில் விவாகரத்து வேண்டி நீதிமன்றங்களுக்குச் செல்கின்றனர். இன்னும் சில தம்பதிகளோ சில மாதங்களிலேயே பிரிந்து விடுகின்றனர். அதற்கு இணையாக பெற்றோர் செய்துவைக்கும் ஏற்பாட்டுத் திருமணங்களிலும் விவாரகத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம், காதல் திருமணங்களில்தான் விவாகரத்துகள் அதிகம் நடப்பதாகக் கூறியது. காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர் காவை மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் தான் அதிகளவில் விவாகரத்து பெறுகின்றனர்’ எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அந்தத் தம்பதிக்கு இடையே சமரசம் செய்ய நீதிமன்றம் முயற்சித்தது. ஆனால் இதை கணவர் ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்தையொட்டி விகடன் இணையதளத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், ’பெரும்பாலான விவாகரத்துகள் காதல் திருமணங்களில்தான் நடக்கின்றன என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து’ எனக் கேள்வி கொடுக்கப்பட்டு, சரியானது, காதல் மணங்களுக்கு எதிரானது, ஏற்பாட்டுத் திருணங்களில்தான் அதிகம் மற்றும் திருமண முறைகள் காரணமல்ல என நான்கு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், 2430 பேர் பங்கேற்ற அந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக 54% பேர் உச்ச நீதிமன்ற கருத்து சரியானது என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 36% பேர் திருமண முறைகள் காரணமல்ல என்றும், மூன்றாவதாக 6% பேர் காதல் மணங்களுக்கு எதிரானது என்றும், இறுதியாக 4% பேர் ஏற்பாட்டுத் திருமணங்களில்தான் அதிகம் என்றும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.