தென் கொரிய அதிபர், ஜப்பான் பிரதமர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஹிரோஷிமா: கொரிய குடியரசு என்று அழைக்கப்படும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். ஜப்பானில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்புக்கு இடையே இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான சிறப்பு கேந்திர கூட்டுமுயற்சியின் முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்ததோடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் உற்பத்தி, பாதுகாப்பு, குறைக்கடத்திகள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் ஆலோசித்தார்கள்.

இரண்டு நாடுகளின் தூதரக உறவின் பொன் விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட இருப்பதை தலைவர்கள் குறிப்பிட்டதோடு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வம் தெரிவித்தனர். சந்திப்பின்போது, பிரதமர் மோடி தலைமையிலான ஜி20 அமைப்பிற்கு கொரிய குடியரசு அதிபர் யூன் சுக் யோல் தனது பாராட்டையும் ஆதரவையும் தெரிவித்தார். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்கான அதிபர் யூனின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கொரிய குடியரசு நாட்டின் இந்தோ-பசிபிக் உத்திக்கு பிரதமர் வரவேற்பு தெரிவித்தார். பிராந்திய வளர்ச்சி குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஜப்பான் பிரதமருடன் சந்திப்பு: பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு சந்திப்பு நடத்தினார். ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் பிரதமர் கிஷிடா இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து, அவர்களது இரண்டாவது சந்திப்பு இது.

இந்த சந்திப்பின் போது ஜி-20 மற்றும் ஜி-7 தலைமைத்துவத்தின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கான வழிகள் பற்றியும், இந்தோ-பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் விவாதித்தனர். அப்போது சமகால பிராந்திய வளர்ச்சிகள் குறித்து இரு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட தலைவர்கள்உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகளை முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்

இருதரப்பு சிறப்பு உத்திபூர்வ, உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இரு தலைவர்களின் விவாதத்தில், கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுலா, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை , பசுமை ஹைட்ரஜன், உயர் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கவனம் செலுத்தப்பட்டன. பயங்கரவாதத்தை ஒழிப்பது மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சீர்திருத்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதனிடையே மார்ச் மாதம் தம்மால் பரிசாக வழங்கப்பட்ட போதி மரக்கன்றுகளை ஹிரோஷிமாவில் நட்டதற்காக ஜப்பான் பிரதமர் கிஷிடாவிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் ஹிரோஷிமா தினத்தை நினைவு கூர்ந்து வருதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஜப்பானிய தூதர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்று வருவதையும் குறிப்பிட்டார்.

ஜப்பானிய பிரமுகர்களுடன் உரையாடல்: ஜி7 உச்சி மாநாட்டிற்கான ஹிரோஷிமா பயணத்தில், ​​ தொழில் துறையில் சிறந்து விளங்கும் ஜப்பானியப் பிரமுகர்களான டாக்டர் டோமியோ மிசோகாமி மற்றும் ஹிரோகோ தகயாமா ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.

டாக்டர். டோமியோ மிசோகாமி, ஒசாகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் மொழியியலாளர் ஆவார். ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில் புலமை பெற்றவர். ஜப்பானில் இந்திய இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு 2018 இல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரபலமான “ஜ்வாலாமுகி” புத்தகத்தை அவர் பிரதமருக்கு வழங்கினார்.

ஹிரோஷிமாவில் பிறந்த திருமதி ஹிரோகோ தகயாமா ஒரு மேற்கத்திய பாணி ஓவியர் ஆவார். அவருடைய படைப்புகள் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவுடனான அவரது ஆழமான தொடர்பால் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவர் இந்தியாவில் பல பயிற்சி வகுப்புகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். சாந்தி நிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் வருகை பேராசிரியராக இருந்தவர். 2022-ல் உருவாக்கப்பட்ட தனது முக்கிய படைப்புகளில் ஒன்றான புத்தபெருமானின் ஓவியத்தை அவர் பிரதமருக்கு வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.