சென்னை: மதுபோதையில் வந்து காவலர்களை அவதூறாக பேசியவரை காவல் நிலையத்தில் வைத்து காலை உடைக்கலாம் என்று என்று எந்த சட்ட பிரிவு கூறுகிறது என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நபர், அதன் பின்னர் மாவு கட்டுடன் காட்சியளித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மது அருந்துவது முன்பெல்லாம் நாட்டுக்கு வீட்டுக்கு கேடு என்று போர்டு இருக்கும். இப்போது மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று மட்டும் மாறிவிட்டது.ஒவ்வொரு சினிமாவிலும் டைட்டில் கார்டுக்கு முன்பு மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்று வரும். ஆனால் இதை எல்லாம் பார்த்து யாரும் திருந்துவதும் இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.
செங்கல்பட்டு மாவட்டம் வேப்பஞ்சேரியை சேர்ந்தவர் நாகராஜ் என்பவர் ஈசிஆர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அவரை கூவத்தூர் போலீசார் மடக்கி சோதனை செய்துள்ளார்கள், அப்போது நாகராஜ் மது போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நாகராஜ் ஓட்டி வந்த ஸ்கூட்டியை பறிமுதல் செய்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு முழு போதையில் இருந்த நாகராஜ், போலீஸ் ஸ்டேசனில் போலீசாரை ஒருமையில் திட்டி அலப்பறை செய்திருக்கிறார். அதனை காவலர்கள் வீடியோவும் எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவ தொடங்கியது.
இதனிடையே சம்பவம் நடந்த மறுநாளே நாகராஜ் இடது காலில் கட்டுபோட்டபடி மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. சரக்கு அடித்துவிட்டு போலீசிடம் அலப்பறை செய்த நாகராஜின் காலுக்கு என்னானது? அவர் கால் எப்படி உடைந்தது என்ற கேள்விகள் எழுந்தன.
இதனிடையே குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூவத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நாகராஜை ‘காமெடி பீஸ்’ எனக் கூறி அவர் உருவத்தை கேலி செய்ததாகவும் அதனால் தான் நாகராஜ் போலீசாரை ஒருமையில் பேசி தீட்டியதாகவும் புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் இது உண்மையா என்பது போலீசார் பதில் அளித்தால் தான் தெரியவரும். இதனிடையே போலீசிடம் அலப்பறை செய்த நாகாஜ் கால் உடைந்தது எப்படி என்று மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. அந்த பதிவில் ” அரசாங்கம் நடத்தும் சாராய கடையில் சாராயம் வாங்கி, அரசியல் கட்சியினர் நடத்தும் சாராய பாரில் அமர்ந்து குடித்து விட்டு போதையில் வண்டி ஓட்டி பிடிபட்டு காவலர்களை அவதூறாக பேசினால் காவல்நிலையத்தில் வைத்து காலை உடைக்கலாம் என்று எந்த சட்ட பிரிவு கூறுகிறது என்று சைலேந்திரபாபு மற்றும் காவல்துறை அமைச்சர் ஸ்டாலின் (முதலமைச்சர்) ஆகியோர் விளக்கம் அளிப்பார்களா? தமிழக காவல்துறைக்கு இதுவா பெருமை? ” என்று கூறியுள்ளது.