ராகுல் காந்தி: அந்த முத்தான 5 வாக்குறுதிகளும் இன்றே நிறைவேற்றப்படும்.. கர்நாடகா ஹேப்பி அண்ணாச்சி.!

கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 5 வாக்குறுதிகளும் இன்றே நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 135 தொகுதிகளை வென்று அறுதி பெரும்பான்மை காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். மேலும் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இந்த பதவி ஏற்பு விழாவில் நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் முக
ஸ்டாலின்
, விசிக தலைவர் திருமாவளவன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமைந்தது, அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியே. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், 200 யுனிட் வரை இலவச மின்சாரம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், டிப்ளோமா படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.1500 மற்றும் மகளிருக்கு இலவச பேருந்த பயணம் உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தசூழலில் காங்கிரஸ் ஆட்சியமைத்த நிலையில் மேற்கூறிய 5 வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற மக்கள் மனதி கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் இன்று நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பதவி ஏற்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி கூறும்போது, ‘‘ஒரு முற்போக்கான கர்நாடகாவின் கனவை நிறைவேற்றுவதற்கான எங்கள் பணி தொடங்கியது.

காங்கிரஸின் 5 உத்திரவாதம் மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தின், புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமையும். வெறுப்பு அரசியலுக்கு மத்தியில் மக்கள் எங்களுக்கு அன்பை வழங்கியுள்ளனர். நாங்கள் பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். மக்களிடம் நாங்க 5 வாக்குறுதிகள் கொடுத்துள்ளோம். இன்று நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அந்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன். எங்கள் அரசு ஏழை மக்களின், சிறு குறு தொழில்நிறுவனங்களின், இளைஞர்கள், பழங்குடிகள் மற்றும் தலித் மக்களின் நலன் சார்ந்த அரசாக செயல்படும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.