சென்னை: கேரளாவில் கிங்காக வாழ்ந்து வரும் நடிகர் மோகன்லால் இன்று தனது 63வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். முழுமையான நடிகர் மோகன்லால் என ரசிகர்களால் கொண்டாடப்படும் லாலேட்டன் அடுத்ததாக லூசிஃபர் 2 (எம்புரான்) ஆக மிரட்ட காத்திருக்கிறார்.
நடிகர்கள் தொடர்ந்து இயக்கத்தில் ஆர்வம் செலுத்தி வருவதை போலவே மோகன்லால் பாரோஸ் எனும் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
மம்மூட்டியை விட கேரளாவில் அதிக சொத்துக் கொண்ட நடிகர் மோகன்லால் தான் என்று கூறி வரும் நிலையில், அவருடைய ஒட்டுமொத்த சொத்துக் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
மோகன்லால் பிறந்தநாள்: விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தா குமார் தம்பதியினருக்கு 1960ம் ஆண்டு மே 21ம் தேதி மகனாக பிறந்தவர் தான் மோகன்லால். இன்று தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வரும் லாலேட்டனுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
1980ம் ஆண்டு தனது 20வது வயதில் மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தின் மூலம் அறிமுகமான மோகன்லால் எனிக்கும் ஒரு திவோசம், கொலகொம்பன், ஹலோ மெட்ராஸ் கேர்ள், திரகல், அழியாத பந்தங்கள், நியான் பிறந்த நாட்டில், நாயகன், ரங்கம் என ஆரம்ப காலக்கட்டத்திலேயே ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த மோகன்லால் இந்த வயதிலும் த்ரிஷ்யம், த்ரிஷயம் 2, லூசிஃபர் என மிரட்டல் பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார்.
இருவர் முதல் ஜெயிலர் வரை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் தமிழிலும் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தில் எம்ஜிஅர் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார். கமல்ஹாசன் உடன் உன்னைப்போல் ஒருவன், விஜய்யுடன் ஜில்லா, சூர்யாவுடன் காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மோகன்லால் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக இணைந்து ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார்.
சம்பளம்: கோலிவுட்டில் ரஜினிகாந்த், விஜய், அஜித் எல்லாம் 100 கோடி சம்பளத்தை கடந்த விட்ட நிலையிலும் மலையாள நடிகர்கள் இன்னமும் சம்பளத்தை பெரிதாக உயர்த்தவில்லை. அதிகபட்சமாக மோகன்லால் புதிய படங்களுக்கு 12 முதல் 15 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் 100 கோடி பட்ஜெட்டில் தான் பெரிய படங்களே அங்கே உருவாகி வருவதாகவும் கூறுகின்றனர்.
காசை கரியாக்காமல் நல்ல கதைகளை திரைப்படங்களாக எடுத்து எப்படி தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தாமல் இருக்க செய்ய வேண்டும் என்பதில் இன்னமும் கவனத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வீடு மற்றும் கார்கள்: 1988ம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட மோகன்லாலுக்கு பிரனவ் மற்றும் விஸ்மயா என இரு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் தனது மகன் பிரனவை ஹீரோவாக ஆக்கி உள்ளார் மோகன்லால். அவர் நடித்த ஹ்ரிதயம் படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
கொச்சியின் பிரதான பகுதியில் சொகுசு வீடு ஒன்று மோகன்லாலுக்கு சொந்தமாக உள்ளது. மேலும், திருவனந்தபுரத்திலும் ஒரு பெரிய வீடு உள்ளது. இதை தவிர சுமார் 50 ஏக்கர் நிலமும் கொச்சியில் மோகன்லாலுக்கு உள்ளது.
சுமார் 20 கோடி மதிப்புள்ள கார்கள் மோகன்லாலிடம் உள்ளதாக கூறுகின்றனர். அதில், W221 Mercedes Benz S-Class, Mercedes Benz GL350 CDI, Toyota Innova, Toyota Vellfire and Ojes Coach Caravan உள்ளிட்டவை அடங்கும்.
சொத்து மதிப்பு: கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் சினிமாவில் நடித்து வரும் நடிகர் மோகன்லால் கேரளாவில் அதிகளவில் சொத்து சேர்த்து வைத்துள்ள நடிகராக திகழ்கிறார் எனக் கூறுகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி, விளம்பரம் என ஆண்டுக்கு 30 முதல் 40 கோடி வரை சம்பாதிக்கும் மோகன்லாலிடம் ஒட்டுமொத்தமாக 380 முதல் 400 கோடி சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயிலர், எம்புரான் என மிரட்ட காத்திருக்கும் மோகன்லால் மேலும், பல பிளாக்பஸ்டர் ஹிட்களை இந்த ஆண்டு குவிக்க வாழ்த்துக்கள்!