கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்… டிகே சிவக்குமார் துணை முதலமைச்சர் ஆனார்!

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். 75 வயதாகும் இவர், அம்மாநிலத்தில் இரண்டாவது முறை முதலமைச்சர் ஆகியிருக்கிறார். முன்னதாக 2013 – 2018 காலகட்டத்தில் முதல்முறை 5 ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில் 2023ஆம் ஆண்டு இரண்டாவது முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுவே தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்று சித்தராமையா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இவருக்கு கர்நாடகா மாநில ஆளுநர் தவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பெங்களூருவில் பதவியேற்பு விழா

இதையொட்டி பெங்களூருவில் உள்ள கண்டிரவா மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைத்து பதவியேற்பு விழாவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை முதலே
காங்கிரஸ்
தொண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருவிற்கு படையெடுத்து வந்தனர். கண்டிரவா மைதானத்தில் சுமார் 50 ஆயிரம் குவிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு

முதலமைச்சராக பதவியேற்றதும் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோரிடம் சித்தராமையா வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.

டிகே சிவக்குமார் துணை முதலமைச்சர்

இதையடுத்து துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் பதவியேற்றார். அரசியல் தலைவர்கள் வழக்கமாக வெள்ளை நிற உடையை தான் அணிந்திருப்பர். இந்நிலையில் டிகே சிவக்குமார் அணிந்திருந்த இரண்டு பட்டைகள் கொண்ட சில்க் சட்டை பெரிதும் கவனம் ஈர்த்தது. பின்னர் அமைச்சர்களின் பதவியேற்பும் நடைபெற்றது.

8 அமைச்சர்கள் பதவியேற்பு

அதாவது, ஜி.பரமேஸ்வரா, கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோரும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் குறித்து இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் அழைப்பு இல்லை

இந்த பதவியேற்பு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஒன்று கூடல் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு பெங்களூரு சரியான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.