கேன்ஸ் பட விழா : காஞ்சிபுரம் பட்டுப்புடவையில் வந்து அசத்திய குஷ்பு

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கோலாகலமாய் நடந்து வருகிறது. ஹாலிவுட் கலைஞர்கள் உட்பட உலகின் பல்வேறு நாடுகளை சார்ந்த திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பிலும் நிறைய திரைப்பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர். மேலும் 21வது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகைகள் மிருணாள் தாக்கூர், சாரா அலிகான், ஊர்வசி ரவுட்டேலா, மனுஷி சில்லார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் நடிகை குஷ்புவும் இந்தியா சார்பில் ஒரு பிரதிநிதியாக பங்கேற்றுள்ளார்.

கேன்ஸ் பட விழாவில் நடந்த சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை குஷ்பு பாரம்பரிய உடையான பட்டுச்சேலை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தார். சேலைக்கு ஏற்ற அவர் அணிந்த ஆபரணங்களும் பார்வையாளர்களை கவர்ந்தது. மணிப்பூரி மாநில சினிமா சார்பில் குஷ்பு கலந்து கொண்டார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛கேன்ஸ் திரைப்பட விழாவில் நம் அழகிய தேசமான இந்தியாவின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பெருமையுடன் முன்னோக்கி எடுத்துச் செல்கிறேன். சிவப்பு கம்பள வரவேற்பில் தென்னிந்திய பாரம்பரிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையில்… இந்த பெருமைமிகு விழாவில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எவ்வளவு பெருமை'' என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.