ஹிரோஷிமா,-”போரால் ஏற்படும் பாதிப்பு, வலி குறித்து, நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். ரஷ்யா – உக்ரைன் இடையே உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா நிச்சயம் செய்யும்,” என, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியிடம், பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்தாண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. இது, ௧௫ மாதங்களைக் கடந்தும் தொடர்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் அடங்கியுள்ள, ‘ஜி – 7’ எனப்படும் உலகின் மிகப் பெரும் பொருளாதார நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு, ஆசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்துவதற்கு, இந்த அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியுடன், பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசி வாயிலாக பலமுறை பேசியுள்ளார்.
இதற்கிடையே, ரஷ்யா போரை நிறுத்துவதற்காக சர்வதேச நாடுகளின் உதவியை உக்ரைன் நாடியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஜி – 7 மாநாட்டில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். ஜப்பானின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடியும் பங்கேற்றுள்ளார்.
மாநாட்டுக்கு இடையே, இருவரும் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, பிரதமர் மோடி கூறியதாவது:
ரஷ்யாவுடனான போர் துவங்கியதில் இருந்து, பலமுறை தொலைபேசி வாயிலாக பேசியுள்ளோம். முதல் முறையாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
துவக்கத்தில் இருந்தே, இந்த பிரச்னைக்கு துாதரகம் வாயிலாகவும், அமைதி பேச்சின் வாயிலாகவும் தீர்வு காண வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த போரால், சர்வதேச அளவில் பெரிய தாக்கம், பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் வாயிலாக, உக்ரைன் சந்திக்கும் பிரச்னைகள், பாதிப்புகள், வலிகள் குறித்து அறிந்தேன். மற்ற அனைவரைவிட உக்ரைனும், உக்ரைன் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தை, நாங்கள் அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ பார்க்கவில்லை. மனிதநேய அடிப்படையிலேயே பார்க்கிறோம்.
அதனால் தான், பேச்சு வாயிலாக இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த விஷயத்தில் தகுந்த தீர்வு காண்பதற்கு இந்தியாவும், தனிப்பட்ட முறையில் என்னாலான அனைத்து உதவிகளையும், முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்ற உறுதியை அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அமைதி திரும்புவதற்காக, தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஜெலன்ஸ்கி விளக்கினார். ”எங்களுடைய இறையாண்மையை மதிப்பதுடன், மனிதநேயத்துடன் உதவிகள் செய்ய முன்வந்துள்ளதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்,” என, அவர் குறிப்பிட்டார்.
‘ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி வேண்டும்’
ஹிரோஷிமாவில் நேற்று நடந்த ஜி – 7 மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:அனைவரையும் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த உணவு உற்பத்தி முறையை நாம் உருவாக்க வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைப்பதுடன், அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும். உணவு பொருட்கள் வீணாவதை தடுக்க வேண்டும். இவற்றை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இதுவே, உலகளாவிய உணவு பாதுகாப்புக்கு அடிப்படையாகும்.பதுக்கல், வினியோகத்தை நிறுத்துவது போன்றவற்றை கைவிட்டு, அனைத்து நாடுகளுக்கும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். இது வெறும் வார்த்தை ஜாலமாக இல்லாமல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும்.நவீன விஞ்ஞான வளர்ச்சிகள், விவசாயிகளையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றுவதாக அறிவியல் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்.ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்துக்கு பாலமாக தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்பாடு இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதைத் தொடர்ந்து, ‘குவாட்’ எனப்படும், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய கூட்டமைப்பின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனஸ் பங்கேற்றனர். அதில் மோடி பேசியதாவது:இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்யவே, இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மற்ற நாடுகளின் எல்லைகளை மதித்து, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து, இணைந்து செயல்படுவதே, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.இந்தப் பிராந்தியத்தின் வர்த்தகம், புதிய கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவை, ஒட்டுமொத்த உலகுக்கானதாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்