சர்வதேச மாநாடுகளின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேடிச் சென்று வாழ்த்து கூறுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதே நிகழ்வு ஜி -7 உச்சி மாநாட்டிலும் அரங்கேறியது.
ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆரத் தழுவி வாழ்த்து கூறினார். இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், ஜி-7 மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவரும் பிரதமர் நரேந்திர மோடியும் நெருங்கிய உறவினர்களைப் போன்று ஆரத் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். உலகின் 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 200 தலைவர்கள் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளனர். குறிப்பாக அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார். சர்வதேச அரங்கில் இந்தியர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சமூகவலைதளவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.