சென்னை: அதிமுக கொடியைப் பயன்படுத்தியது தொடர்பாக சேலத்தில் பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பில் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மீது நடவடிக்கை எடுக்காமல், பழனிசாமி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் கொடி, பெயர், சின்னத்தை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்றும் சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எந்த வகையிலும் அதிமுகவுக்கு சம்பந்தம் இல்லாதநிலையில், அவர்கள் அதிமுக கொடியையோ, கட்சி பெயரையோ, சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவு உள்ளது.
ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பினர் கட்சியின் கொடி, பெயர், சின்னம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையின் முகவரியை லெட்டர்பேடில் பயன்படுத்துவது என்பது சட்டவிரோதம்.
கர்நாடக தேர்தலில் எங்கள்கட்சியின் பெயரை பயன்படுத்தியபோது இதுகுறித்து புகார் அளித்தோம். அப்போது, அங்கிருக்கும் காவல்துறை இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். அதுபோல தமிழகத்தில் அனைத்து மாவட்ட கண்காணிப்பாளருக்கும் தேவையான உத்தரவுகளை டிஜிபிவழங்கவேண்டும். வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவே ஓபிஎஸ் தரப்பினர் சேலத்தில் எங்கள் கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தி உள்ளனர்.
இதை முற்றிலும் தடுக்க வேண்டியது காவல்துறையின் கடமை. இல்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம் என்று டிஜிபியிடம் தெரிவித்துள்ளோம்.
காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.