நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வருமே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து கணக்கில் வர வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
நாளொன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் வங்கியில் மாற்றலாம் எனவும், அவ்வாறு வங்கிகளில் செலுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடக்கூடாது எனவும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் கடைகளில் பணி புரியும் ஊழியர்கள் வாங்க கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால் அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களே பொறுப்பு என டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவித்ததாக தகவல் கசிந்தது.
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி “முற்றிலும் தவறான செய்தி. இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை” என தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். இதனால் குடிமகன்கள் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் டாஸ்மாக் கடை ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை தற்பொழுது வைரலாகி வருகிறது. அந்த அறிவிப்பு பலகையில் “தலைமை அலுவலக உத்தரவின்படி 2000 ரூபாய் தாள் வாங்கப்பட மாட்டாது – டாஸ்மாக் நிர்வாகம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்த நிலையில் மாலையில் இந்த அறிவிப்பு பலகை வைத்திருப்பது குடிமகன்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் ஒன்று கூற டாஸ்மாக் நிர்வாகம் ஒன்று செய்வதால் ஒரு முடிவுக்கு வர வேண்டுமென குடிமகன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
2000 ரூபாய் வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என அமைச்சர் சொன்னாரே 🤔 மாத்தி மாத்தி பேசுறீங்க. ஏற்கனவே குடியில் போதையில் இருப்பவனை விட நீங்க பயங்கர குழப்பத்தில் ஆட்சி பண்ணுறீங்கப்பா 🤦🤦🤦😡 pic.twitter.com/fHB8AWwJef
— இந்திராணி M.Sc.LLB (@IndiraniSudala1) May 20, 2023