போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சவுகானுக்கும் மாநில பாஜக கட்சிக்கும் இடையேயான முட்டல் மோதல் சீனியர் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. இதனால் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் படுதீவிர பிரசாரம் செய்தும் படுதோல்வி கிடைத்திருப்பதைத்தான் பாஜகவினரால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்நிலையில் தெலுங்கானா, மபி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இந்த 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு கடும் நெருக்கடி காத்திருக்கிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறதுதான். ஆனால் 2018 தேர்தலில் காங்கிரஸ்தான் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் அரசை கவிழ்த்துதான் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சீனியர் தலைவர்தான். இருந்த போதும் மாநில பாஜக நிர்வாகிகள் ஒரு பக்கமாகவும் சவுகான் இன்னொரு பக்கமாகவும் பயணிப்பதால் கடும் அதிருப்தியில் கட்சியினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சவுகான் தலைமையிலான அமைச்சரவையின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதால் அமைச்சரவை மாற்றம் தேவை என்கின்றனர் சீனியர் கட்சி நிர்வாகிகள். ஆனால் அப்படி எல்லாம் செய்ய அனுமதிக்க முடியாது என்கிறாராம் சவுகான்.
இதனால் இப்போது ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் நேரடியாக தலையிட வேண்டும் என்கிற கோரிக்கையை ம.பி. பாஜக நிர்வாகிகள் முன்வைத்துள்ளனர். ஏனெனில் ம.பி. மாநிலத்தில் பாஜக வேரூன்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் காரணம்; ஆகையால் ஆர்.எஸ்.எஸ். மூத்த நிர்வாகிகள் தலையிட வேண்டும் என்கின்றனர் பாஜக தலைவர்கள்.
இத்தகைய கோரிக்கைகளைத் தொடர்ந்து ம.பி. மாநில ஆட்சி மற்றும் கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள பாஜகவின் டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படியாவது பாஜகவின் பெருந்தோல்வியைத் தவிர்க்க முடியுமா? என முயற்சிப்போம் என்கின்றனராம் டெல்லி தலைவர்கள்.