புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தானே திறக்க வேண்டும்?- ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் தானே திறக்க வேண்டும். பிரதமர் ஏன் திறக்கிறார்” என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இக்கேள்வியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் எழுப்பியுள்ளார்.

வரும் மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் இக்கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் மே 28 ஆம் தேதியானது இந்துத்துவா மறைந்த தலைவர் விடே சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினத்தை திட்டமிட்டே தேர்வு செய்துள்ளனர் என்று பாஜக மீது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

“பிரதமர் என்பவர் இந்திய அரசாங்கத்தின் தலைவர் ஆனால் குடியரசுத் தலைவர் இந்திய தேசத்தின் தலைவர். புதிய நாடாளுமன்றத்தை அவரை அழைத்து திறக்காமல் பிரதமரை வைத்து திறப்பது குடியரசுத் தலைவருக்கும் அப்பதவிக்கும் செய்யும் இழுக்கு” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

96 ஆண்டுகள் பழமையான கட்டிடம்: டெல்லியில் தற்போது இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கின. 2021, 2022-ம் ஆண்டு கரோனா காலத்திலும் இதற்கான பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா கட்டிடப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமாகிவிட்டது.

28-ம் தேதி திறப்புவிழா: தற்போது பணிகள் முடிந்த நிலையில், வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து, முறைப்படி வழங்கினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ள மக்களவை அரங்கில் 888 உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. இதைப்போல மாநிலங்களவையில் 300 எம்.பி.க்கள் அமர வசதி உள்ளது. அதேநேரம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டால் 1,280 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் வகையிலும் மக்களவை அரங்கில் வசதி செய்யப்பட்டு உள்ளது . இந்தத் திட்டத்தை டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டமைத்து வருகிறது.

பிரம்மாண்டமான கட்டிடம்: புதிய கட்டிடத்தில் பிரம்மாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்களின் ஓய்வு அறைகள், பிரம்மாண்ட நூலகம், பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களுக்கான விசாலமான அறைகள், உணவு அருந்தும் பகுதி, மிகவும் விசாலமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டிடம் சுயசார்பு இந்தியா திட்டத்தின் உணர்வை குறிக்கிறது. பழைய கட்டிடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை.

இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 28-ம் தேதி புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.