ஜுன் 3-ல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்: திமுக தீர்மானம்

சென்னை: ஜுன் 3-ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெறும் என்று திமுக உயர்நிலை செயல்திட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக உயர்நிலை செயல்திட்ட ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மே 21) நடைபெற்றது.

உயர்நிலை செயல்திட்ட ஆலோசனைக்குழுவின் தலைவராக இருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கட்சியின் துணைச் செயலாளர்கள், முதன்மை பொதுச் செயலாளர்கள் உட்பட 28 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வரும் ஜுன் 3ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்த விழா குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் வரும் ஜுன் 5-ம் தேதி தமிழகம் வருகிறார். இந்த விழாவுக்கு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

> மறைந்த முதல்வர் கருணாநிதியை தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எங்கெங்கும் நடத்திட வேண்டும்.

> ஜுன் 3 அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெற இருக்கிறது.

> ஜுன் 20ம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார்.

> நூற்றாண்டு விழாவினைக் கழக மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2023 ஜுன் 3 தொடங்கி, 2024 ஜுன் 3 வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

> ஒவ்வொரு நிகழ்வும் திராவிட இயக்கத்தின் கொள்கை முழக்கமாகவும், கலைஞரின் அளப்பரிய சாதனைகளை மக்களின் நெஞ்சில் பதியச் செய்யும் வகையிலும் அமைந்திட வேண்டும்.

> ஜுன் 3 அன்று கிளைக் கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்தினை வைத்து, கழகத் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்திட வேண்டும்.

> நூற்றாண்டு விழாவினையொட்டி, “ஊர்கள் தோறும் திமுக” எனும் தலைப்பில், கிளைக் கழகங்களில் அமைந்துள்ள நமது பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

>மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி – அனுமதி பெற்று, “எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், அவரது முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

> கழக மாவட்டங்களில் உள்ள ஒன்றியம்/ நகரம்/ பகுதி/ பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான, அரும்பாடுபட்ட கழக மூத்த முன்னோடிகளுக்குப் “கழகமே குடும்பம்” எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

> கழகத்தின் மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று கவுரவிக்க வேண்டும்.

> மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கும் வகையிலான நிகழ்வுகளையும் போட்டிகளையும் நடத்த வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளுடன் கலைஞர் எழுதிய புத்தகங்களையும் வழங்கிட வேண்டும்.

> ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்வி உதவிகளை வழங்கிடலாம்.

> ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் கழகக் குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கல்வி உதவிகளை வழங்கிடலாம்.

> பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் “என்றென்றும் கலைஞர்” எனும் தலைப்பில், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும்.

> இன்றைய சூழலுக்கேற்ப கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கிட வேண்டும். அது பொதுமக்களுக்கு உதவிடும் மையங்களாகத் திகழ்ந்திட வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.