2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு மாற்றாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சாமானிய மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நீண்ட வரிசையில் நின்று அவதிக்குள்ளாகினர். மத்திய அரசின் இத்தகைய செயலுக்கு அப்போதே கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர் மக்கள். நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. ஆனால் நீதிமன்றமும், இது சரி என்றே கூறிவிட்டது.
இப்படியிருக்க ஒருபக்கம், கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இல்லையென பேச்சுக்கள் அடிபட்டன. இதற்கிடையில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் நிறுத்திவிட்டது அரசு. இந்த நிலையில் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக ஆர்.பி.ஐ அறிக்கை வெளியிட்டது.
அதில், மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், டெபாசிட் செய்துகொள்ளலாம் என ஆர்.பி.ஐ குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக, ஒருவர் ஒருமுறைக்கு 20,000 ரூபாய் அளவுக்கு மட்டுமே 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் கொண்டுவரத் தேவையில்லை என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிக்கை வெளியிட்டிருக்கிறது.