வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாட்ரிட்: வீட்டு வேலைகளில் அதிக பங்களிப்பு வழங்க ஆண்களை ஊக்குவிக்கும் முயற்சியில், ஒவ்வொரு வீட்டிலும் அவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினரும் எவ்வளவு நேரம் வீட்டு வேலைகளை செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க ஒரு செயலியை அறிமுகப்படுத்த ஸ்பெயின் அரசு திட்டமிட்டு உள்ளது. பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது தொடர்பாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவது தொடர்பான மாநாட்டின் போது ஸ்பெயின் பாலின சமத்துவத்திற்கான துறை அமைச்சர் எஞ்சலா ரோட்ரிக்ஸ் அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாக வெளிநாட்டு பத்திரிகைகளில் வெளியான செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினர்கள் செய்யும் வீட்டு வேலைகள் குறித்து மக்களே பதிவு செய்யும் வகையில் செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் வீட்டு வேலைகளை எவ்வளவு மணி நேரம் செய்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
2,11,750 ஈரோக்கள்(ஐரோப்பிய பண மதிப்பு) செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்துள்ளனரா என்பது உறுதி செய்யப்படும். மகன்கள், மகள்கள், தந்தை, தாய்மார்கள் இடையே வேலைகளை பகிரந்து கொள்ளக்கூடிய ஒரு பயிற்சியாக இதனை கருதுகிறோம். இந்த பணிகளில் சில, சில சமயங்களில் சமம் அற்றதாக உள்ளது. ஒரு வீட்டை சமமாக நடத்துவதற்கு தேவையான , கண்ணுக்கு தெரியாத அனைத்து வேலைகளையும் முன்னிலைப்படுத்துவதற்கு இந்த செயலி உதவும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement