நெல்லை: திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் வஹாப், அண்மையில் தான் தனது மகனுக்கு நிச்சயத்தார்த்தம் நடத்தியிருந்தார்.
அதைத் தொடர்ந்து தனது மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடத்த வேண்டும் என்ற ஆசையுடன் அவரிடம் தேதி கேட்டு காத்திருந்து வந்தார் அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.
ஆனால் அதற்குள் அவரிடமிருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து ஹைவோல்ட் ஷாக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்துல் வஹாப் மீதான முதலமைச்சரின் கோபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுடன் பனிப்போர், மாவட்ட பொறுப்பு அமைச்சரான ராஜகண்ணப்பனோடு முரன்பாடு, பிரபல ஜவுளிக்கடைக்கு எதிரான குடைச்சல் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
அதுமட்டுமல்ல பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலுவுக்கு ஒப்பந்தப் பணிக்காக செய்த பரிந்துரை கடிதம் லீக், சொத்து விவகாரம் என இன்னும் சில உள் விவகாரங்களும் அப்துல் வஹாப் பதவி பறிப்புக்கான காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலமைச்சரை அழைத்து வந்து அவரது தலைமையில் தனது மகன் திருமணத்தை நடத்திக்காட்டுவேன் என்பதில் ஒற்றைக்காலில் நின்ற அப்துல் வஹாப், பதவி பறிப்பு பற்றிய அறிவிப்புக்கு பிறகு சோர்வடைந்து விட்டாராம்.
இனிமேல் அப்துல் வஹாபுக்கு முதல்வர் தேதி கொடுப்பது மிகவும் கடினம் எனக் கூறுகிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள். அப்துல் வஹாப் மீதான அதிரடி நடவடிக்கையை தங்களுக்கான எச்சரிக்கை மணியாக பார்க்கிறார்கள் பல மாவட்டச் செயலாளர்கள்.
கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்திவிட்டார் ஸ்டாலின். இன்னும் இந்த நடவடிக்கை இனி வரும் நாட்களில் தொடரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.