புதுடெல்லி,
டெல்லியில் ஐ.,ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளை நியமிக்கிற, இடமாற்றம் செய்கிற அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனத்திலும், இடமாற்றத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என கடந்த 11-ந்தேதி அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இதனால் மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னரின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. டெல்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ள சூழலில், இந்தத் தீர்ப்பு, மத்திய அரசுக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்த நிலையில், இத்தீர்ப்பை செல்லாதது என ஆக்குகிற வகையில் அதிகாரிகள் நியமனம், இடமாற்றம் தொடர்பாக தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைப்பதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த அவசர சட்டத்தில், தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தவும், அதற்கு ஒதுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றவும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் எல்லா முடிவுகளையும், கூட்டத்தில் ஆஜராகிற பெரும்பான்மை உறுப்பினர்கள் ஓட்டு போட்டு தீர்மானிக்க வேண்டும். இதற்கு உறுப்பினர் செயலாளர் அங்கீகாரம் அளிக்க வேண்டும். அவசர சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தால், முதல்-மந்திரி தன் விருப்பப்படி எந்த முடிவும் எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த அவசர சட்டம், மோசடி என்று முதல்-மந்திரி கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சாடி உள்ளது.
இதனால், மத்திய அரசின் பிரதிநிதியாக திகழ்கிற துணை நிலை கவர்னருக்கு மீண்டும் அதிகாரம் அளிப்பதற்கு இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. இந்த சூழலில், கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் வைத்து, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேரில் இன்று சந்தித்து பேசினார். இதில் கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்றுக்கு வழங்கிய அதிகாரங்களை எப்படி எடுத்து செல்ல முடியும்? இது அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. கெஜ்ரிவாலுக்கு துணையாக நாங்கள் இருப்போம் என கூறியுள்ளார்.
நிதிஷ் குமார், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி குறிப்பிட்ட அவர், வருங்காலத்தில் நாங்கள் கூட்டங்களை நடத்துவோம். நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.
இதேபோன்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறும்போது, நிதிஷ் ஜியுடனான கூட்டத்தில், டெல்லிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மறுக்கிற வகையில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் பற்றிய விவகாரத்தில், டெல்லியின் மக்களுக்கு துணையாக நிற்பேன் என அவர் என்னிடம் கூறினார் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.