சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் தான் போட்டியிடப்போவதில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அண்ணாமலை போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து தமிழ்நாட்டில் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. பல்வேறு சச்சரவுகள் நடந்த பிறகும், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்த போதே இந்தக் கூட்டணி உறுதியாகி விட்டது.
முதலில், அதிமுகவிடம் இருந்து குறைந்தபட்சம் 20-க்கும் மேற்பட்ட சீட்டுகளையாவது வாங்கிவிட வேண்டும் என பாஜக திட்டம் தீட்டி வருகிறது. அதை மனதில் வைத்தே தற்போது 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக கடுமையாக வேலை பார்த்து வருகிறது.
அண்ணாமலை ப்ளான்:
இதில் கோவை தொகுதியும் ஒன்று. கோவையில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதால் இந்த முறை அங்கு அண்ணாமலை போட்டியிடுவார் என தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதனை மெய்ப்பிக்கும் விதமாக கோவைக்கு அண்ணாமலை அடிக்கடி சென்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார்.
போட்டியிடவில்லை:
இந்த சூழலில்தான், கோவை தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காகதான் பாஜகவுக்கு நான் வந்திருக்கிறேன்.
டெல்லி அரசியல் வேண்டாம்:
கோவை தொகுதியில் நிற்பதற்கு பல தகுதியான நபர்கள் கட்சியில் இருக்கிறார்கள். அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதே என் வேலை. பாஜகவில் ஒரு தொண்டனாக பணியாற்ற நினைக்கிறேன். டெல்லி அரசியலுக்கு செல்ல எப்போதும் நான் விரும்பியது கிடையாது” என்றார். என அவர் கூறினார்.
என்ன காரணம்?
கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடாததற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை தான் தேர்தல் துணைப் பொறுப்பாளராக பணியாற்றினார். ஆனால், அங்கு பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது. இது அண்ணாமலை மீதும் எதிரொலித்துள்ளது. எனவே இதுபோன்ற சூழ்நிலையில் அண்ணாமலையை தேர்தலில் நிற்க வைப்பது சரியான யோசனை அல்ல என பாஜக மேலிடம் கருதுவதாக கட்சியின் சீனியர் தலைவர்கள் சிலர் தெரிவித்தனர்.