சென்னை: Rajamouli (ராஜமௌலி) பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ராஜமௌலி தான் இயக்கிய பாகுபலி படம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜமௌலியை புகழ்ந்த மணிரத்னம்: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. மணிரத்னமே கூட, பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வசூலை அள்ளிய பாகுபலி: ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆஸ்கரில் ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக் மாறியிருக்கிறார். ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார்.
பாகுபலி மோசமான படம்: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ராஜமௌலி,, “பாகுபலி முதல் பாகத்துக்கு வந்த விமர்சனங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. அந்தப் படமானது தமிழ்நாடு, கேரளா, வட இந்தியா, அமெரிக்கா, துபாய் ஆகிய இடங்களில் வெளியாகி நல்ல விமர்சனஙகள் கிடைத்தன. ஆனால் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இது மோசமான படம். இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவும் என்று பேசினர்.
தொடர்ந்து 3 வருடங்களாக என்னை ஆதரித்த தயாரிப்பாளர் குறித்து வருந்தினேன். அவர் இந்தப் படத்துக்காக நிறைய பணம் செலவிட்டார். அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வது என தெரியாமல் தவித்தேன்” என்றார். இதற்கு முன்னதாக ராஜமௌலி அளித்த பேட்டி ஒன்றில், மகாபாரதம் கதையை பத்து பாகங்களாக எடுப்பேன் என்றும், கதையில் மாற்றம் இருக்காது. அதேசமயம் கதாபாத்திரங்களும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு மேம்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.