கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் டாஸ்மாக்கில் மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு ஏன் அமல்படுத்தவில்லை என்ற கேள்விக்கு அரசாங்கம் சொல்லும் ஒரே பதில் கள்ளச்சாராயம். ஆனால் கள்ளச்சாராய சாவு நடைபெறுகிறது.
இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். கள்ளச்சாராயம் விவகாரத்தில் எந்த அரசியல் கட்சியினர் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியின் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது.
கோவையில் புதிய சாலைகள் கண்ணில் கூட பார்க்க முடியவில்லை இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் விமானத்தில் கோரிக்கை வைத்தேன். வரக்கூடிய காலங்களில் சாலைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசினார்.
2000 ரூபாய் நோட்டுகளை வியாபாரிகளோ கடைக்காரர்களோ வாங்க மறுத்தாலோ, வேண்டும் என்று அலைக்கழித்திலோ நடவடிக்கை எடுக்கலாம். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் தருகிறார்கள். தமிழகத்தில் நல்ல சாராயம் குடித்தும் பலர் இருக்கின்றனர். அதன் காரணமாக மது குடிப்பவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதன் மூலம் உயிரிழப்பு ஏற்படும் பொழுது உரிய இழப்பீடு தர வேண்டும்” என செய்தியாளர்கள் சந்திப்பில் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.