சென்னை:
தமிழ்நாட்டில் மது விற்பனையை மார்க்கெட்டிங் போல அரசு செய்து வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். டாஸ்மாக்குக்கு டார்கெட் கொடுத்து, அதை அடைவதற்கு மாவட்ட கலெக்டர் மூலமாக அரசு அழுத்தம் கொடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
விழுப்புரத்திலும், செங்கல்பட்டிலும் கள்ளச்சாராயம் குடித்து 23-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் பாஜக, தமிழ்நாட்டில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
மேலும், இந்தக் கள்ளச்சாராய மரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை கூறியதாவது:
தமிழ்நாட்டில் எந்த தாய்மார்களை சந்தித்தாலும், இந்த டாஸ்மாக்கை எப்படியாவது மூட வையுங்கள் என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், திமுக என்ன சொல்கிறது? 44 ஆயிரம் கோடி வருமானத்தை தரும் டாஸ்மாக்கை எப்படி மூட முடியும் எனக் கேட்கிறது. இந்தியாவில் எங்கேயும் மதுக்கடைகளை 100 சதவீதம் மூட வேண்டும் என பாஜக சொல்லவில்லை. முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள் என்றுதான் சொல்கிறோம். தமிழ்நாட்டில் தற்போது 5400 டாஸ்மாக் இருக்கிறது. இதை அடுத்த 3 வருடங்களில் 80 சதவீதம் வரை குறையுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.
கேரளா, பீகாரில் மதுக்கடைகளுக்கு ஒரு வரம்பு இருக்கிறது. தமிழ்நாட்டை போல எங்கேயும் தெருவுக்கு தெரு மதுக்கடைகளை எந்த மாநிலத்திலும் திறக்கவில்லை. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு மாதந்தோறும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இலக்கை எட்டுவதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கலெக்டர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இலக்கை அடைய முடியாவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம் இருக்கிறார்கள். வீதிக்கு வீதி டாஸ்மார் திறந்து வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேலை முடித்து வீட்டுக்கு போவதற்குள் 4 டாஸ்மாக் கடைகளையாவது தாண்டி செல்ல வேண்டி இருக்கிறது. 2021இல் இருந்து 2023-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருமானம் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏதோ பொருளை விற்பதை போல மார்க்கெட்டிங் செய்வதை போல தமிழ்நாடு அரசு மதுவை விற்று வருகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.