தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீஸார் உள்ளிட்ட 2,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.
கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இந்த ஆவையை திறக்க வேண்டும் என சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆலையை திறக்கக்கூடாது என எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை (மே 22) கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் மக்கள் அதிகமாக கூடும் முத்துநகர் கடற்ரையில் இன்று (மே 21) மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த அனுமதி கோரி வழக்கறிஞர் அரிராகவன் என்பவர் காவல் துறையிடம் மனு அளித்திருந்தார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
இருப்பினும் முத்துநகர் கடற்கரையில் அஞ்சலி நிகழ்ச்சி நடப்பதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இதையடுத்து இது தொடர்பாக எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். முத்துநகர் கடற்கரையில் எந்தவித அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். மேலும், இவ்வாறு அவதூறு வதந்திகளை பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேநேரத்தில் முறையாக அனுமதி பெற்று வழக்கமாக நடைபெறும் இடங்களில் நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு எந்த தடையும் இல்லை. அதில் மக்கள் கலந்து கொள்ளவும் தடை இல்லை என எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து தூத்துக்குடி குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், மடத்தூர், சில்வர்புரம், பாத்திமாநகர், தோமையார் கோயில் தெரு, பூபாலராயர்புரம், முத்தையாபுரம், லயன்ஸ்டவுன் ஆகிய பகுதிகளிலும், துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் சமாதிகளிலும் நாளை காலை நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மேலும், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எஸ்பி எல்.பாலாஜி சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் ஆலை பகுதி, குடியிருப்பு பகுதி, சுற்றுவட்டார கிராமங்கள், தூத்துக்குடி நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய தகவலை தொடர்ந்து தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவை போலீஸார் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். பூங்காவை சுற்றிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பூங்கா இன்று முழுவதும் மூடப்பட்டது. அங்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் முத்துநகர் கடற்கரை பூங்காவுக்கு ஏராளமான மக்கள் குடும்பத்தோடு வருவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து எஸ்பி எல்.பாலாஜி சரவணன் கூறும்போது, “தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும். அனுமதி பெறாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. தூத்துக்குடியில் வெளி மாவட்ட போலீஸார் 1200 பேர் உள்ளிட்ட மொத்தம் 2,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கான தேவை இல்லை. தொடர்ந்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார் அவர்.