சான் சல்வடார்: எல் சல்வடாரில் கால்பந்து போட்டியை காண சென்ற ரசிகர்கள், 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரின் தலைநகர் சான் சல்வடார் அருகே உள்ள கஸ்கட்லானில், கால்பந்து பிரீமியர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இங்குள்ள நினைவுச் சின்ன மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டியில், அலியான்சா மற்றும் எப்.ஏ.எஸ்., அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர்.
ஏற்கனவே, மைதானத்தில் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்த நிலையில், மேலும் சிலர் டிக்கெட்டுகளை வாங்கி நுழைவாயில் வழியாக மைதானத்திற்குள் செல்ல முயன்றனர்.
ஒரே சமயத்தில் ஏராளமானோர் செல்ல முயன்றதால் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இதனால், ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.
நுாற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ரசிகர்கள் பலியானதை அடுத்து, போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement