'கழகமே குடும்பம்'… தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழு தீர்மானங்கள் இதோ!

தலைவர்

தலைமையில், இன்று (21.5.2023) தி.மு.க. உயர்நிலைச் செயல்திட்டக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:

தீர்மானம் :

ஜூன் 3-அன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டம் வடசென்னையில் நடைபெற இருக்கிறது.

ஜூன் 20-ஆம் நாள் திருவாரூரில் எழிலுற அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர்

நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார். இந்த விழா, முழுநாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2023 ஜூன் 3 தொடங்கி, 2024 ஜூன் 3 வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

“ஊர்கள் தோறும் தி.மு.க.” எனும் தலைப்பில், கிளைக் கழகங்களில் அமைந்துள்ள நமது பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

“எங்கெங்கும் கலைஞர்” என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

நூற்றாண்டு நிகழ்ச்சிகளில் முக்கியமாக, மாவட்டங்களில் உள்ள ஒன்றியம்/ நகரம்/ பகுதி/ பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான, அரும்பாடுபட்ட மூத்த முன்னோடிகளுக்குப் “கழகமே குடும்பம்” எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று கௌரவிக்க வேண்டும்.

பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் “என்றென்றும் கலைஞர்” எனும் தலைப்பில், கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும்.

இன்றைய சூழலுக்கேற்ப கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கிட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.