ஹிரோஷிமா: ‘‘சர்வதேச அளவில் உரம் விநியோக சங்கிலியில் உள்ள அரசியல் ரீதியான தடைகளை நீக்க வேண்டும். செயற்கை உரங்களுக்கு மாற்றாக, உலக அளவில் இயற்கை விவசாயத்துக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில், சில நாடுகளின் தலைவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். அவர்களில் பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றினார்.
இயற்கை விவசாயத்துக்கு ஆதரவு
முன்னதாக, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் – பிரதமர் மோடி சந்திப்பு நடைபெற்றது.அப்போது பாம் மின் சின்னிடம் பிரதமர் மோடி கூறும்போது, ‘‘சர்வதேச அளவில் உரம் விநியோகத்தில் உள்ள அரசியல் ரீதியான தடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அது இந்த நேரத்தில் மிகவும் அவசியமானது.
மேலும், செயற்கை உரங்களுக்கு மாற்றாக, உலக அளவில் இயற்கை விவசாயத்துக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். எனினும், உரம் விநியோக சங்கிலியை நாம் பலப்படுத்த வேண்டும். உரத்துக்கான ஆதாரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற சில நாடுகளின் போக்கை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால், உலக அளவில் உரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.
பின்னர், மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவில் திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்துள்ளோம். பல்வேறு துறைகளிலும், மற்றவர்களைப்போல அவர்கள் சரிசமமாக ஈடுபடும்நிலை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவின் வளர்ச்சி என்பது பெண்களின் நலத்திட்டங்களில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தற்போது பெண்களின் மேம்பாடு என்பது விவாதப் பொருளாக இல்லை. ஏனென்றால், பெண்கள் தலைமையிலான மேம்பாட்டில் இந்தியாதான் தலைமையாக விளங்குகிறது.
சிறுதானியங்களுக்கு ஊக்கம்
அதேபோல, இந்தியாவில் சிறுதானியங்களை பிரபலப்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு சவால்களை சமாளிக்க சிறுதானியங்கள் உதவுகின்றன. அத்துடன் பருவநிலை மாறுபாடு, தண்ணீர் சேமிப்பு, உணவு பாதுகாப்பு போன்ற பல வழிகளில் சிறுதானியங்கள் உதவி செய்கின்றன. அனைத்து பொருட்களும் அடங்கிய உணவு கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கிறோம். மிகவும் பின்தங்கிய, ஏழை விவசாயிகளின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.
மோடியிடம் ஆட்டோகிராப் கேட்ட ஜோ பைடன்
ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி-7 மாநாட்டை தொடர்ந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் அடங்கிய ‘குவாட்’ அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, மோடியின் அருகே வந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:
ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறீர்கள். அடுத்த மாதம் அமெரிக்கா வரும் உங்களுக்கு வெள்ளை மாளிகையில் அரசு சார்பில் விருந்தளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதில் பங்கேற்க வேண்டும் என்று ஏறக்குறைய எல்லா அமெரிக்கர்களும் ஆசைப்படுகின்றனர். விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை சந்திக்க முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள், உறவினர்கள் என ஏராளமானோர் ‘டிக்கெட்’ கேட்கின்றனர். எத்தனை பேரைதான் நான் அழைப்பது? உங்களால் எனக்கு இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நான் கிண்டலடிப்பதாக நினைக்காதீர்கள். என் குழுவினரை கேட்டுப் பாருங்கள். அமெரிக்காவில் உங்களை பார்க்க அவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்.
இவ்வாறு ஜோ பைடன் கூறியதை, பிரதமர் மோடி புன்முறுவலுடன் கேட்டபடி இருந்தார். உடனே, அருகில் இருந்த ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ‘‘அதே பிரச்சினை எனக்கும் உள்ளது. சிட்னியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார். அங்கு 20 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க விரும்புகின்றனர்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட அதிபர் ஜோ பைடன், மோடியிடம், ‘‘நீங்கள் பிரபலமாக இருக்கிறீர்கள். உங்களிடம் நான் கட்டாயம் ஆட்டோகிராப் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று சிரித்துக்கொண்டே கூறினார்.