Vijay Sethupathi: கதை திருட்டு சர்ச்சையில் விஜய் சேதுபதி திரைப்படம்… தொடங்கியது அடுத்த பஞ்சாயத்து!

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மே 19ம் தேதி வெளியானது.

ரோகந்த் இயக்கியுள்ள இந்தப் படம் ஈழ அகதிகளின் வாழ்வை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.

ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர் படம், தற்போது கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சமீபத்தில் சசிகுமாரின் அயோத்தி படம் கதை திருட்டுச் சம்பவத்தில் சிக்கி சர்ச்சையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கதை திருட்டு சர்ச்சையில் விஜய் சேதுபதி படம்
கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான விஜய் சேதுபதி அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பல நாட்களாக வெளியாகாமல் இருந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் (மே 19) வெளியானது. விஜய் சேதுபதியுடன் மேகா ஆகாஷ், கன்னிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை ரோகந்த் இயக்கியுள்ளார்.

இலங்கை அகதிகளின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படத்திற்கு, ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் பத்திநாதன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் திரைப்படம் 19.05.2023 அன்று வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த இப்படத்தை வெங்கட் கிருஷ்ண ரோகாந்த் இயக்கியுள்ளார். இதனை சந்திரா ஆட்ஸ் சார்பில் s எசக்கி துரை தயாரித்திருக்கிறார்.

ஈழ அகதிகளின் வாழ்வைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இந்தப் படம் கதையம்சம் சார்ந்தும் காட்சிகள் சார்ந்தும் எனது தன்வரலாற்று நூலான ‘போரின் மறுபக்கம்’, கட்டுரை நூலான ‘தகிப்பின் வாழ்வு’, ‘அந்தரம்’ நாவல், ‘நாளையும் நாளையே’ சிறுகதை ஆகியவற்றிலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல கூறுகளை எடுத்துக்கொண்டுள்ளது. அகதிகள் குறித்து 2007இல் தனது தன்வரலாற்று நூல் ‘போரின் மறுபக்கம்’ வெளியானதைத் தொடர்ந்து ‘தமிழகத்தின் ஈழ அகதிகள்’, ‘தகிப்பின் வாழ்வு’ ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகளும், ‘அந்தரம்’ நாவலும் எழுதியிருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 Vijay Sethupathis film Yaadhum Oore Yaavarum Kelir is embroiled in a story plagiarism controversy

மேலும், இவற்றைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அத்துடன் தொகுப்பாக்கப்படாத பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியிருக்கிறேன். தகிப்பின் வாழ்வு நூலில் சிம் கார்டு வாங்குவது தொடர்பான உரையாடலிலிருந்து கட்டுரை ஆரம்பமாகும். இந்த உரையாடல் கடையில் இருக்கும் பெண்ணுடன் உரையாடலாக இருக்கும். இது நேரடியாகப் படமாக்கப்பட்டுள்ளது. பெண் கதாபாத்திரத்தை ஆணாக மாற்றியிருக்கிறார்கள்.

2016 காலச்சுவடு இதழில் வந்த எனது ‘நாளையும் நாளையே’ சிறுகதையில் உதவிப்பணம் வழங்கும் அதிகாரி முன் குனிந்து கையெழுத்திடும் பெண்ணின் மார்பகங்களை அதிகாரி பார்ப்பதால் அந்தப் பெண் அதை சரிசெய்ய முற்படுவாள். இதனால் கடுப்படையும் அதிகாரி அப்பெண்ணைக் கூடுதல் விசாரணைக்கு உட்படுத்துவார். இந்தக் காட்சி படத்தில் காவல் நிலையத்தில் மார்பகங்கள் தெரிய அகதிப் பெண்ணிடம் விசாரணை நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது.

முகாமிலிருந்து எட்டாண்டுகள் பதிவில்லாமல் இருந்துவிட்டு மறுபடியும் முகாமில் பதிவுபெற்றேன். இரண்டு பெயர்களில் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமிலும் முகாமிற்கு வெளியிலும் வாழ்ந்திருக்கிறேன். ஐந்து நட்சத்திர ஓட்டலில் அகதி என்பதை மறைத்து வேலை செய்தபின் உண்மையை நிர்வாகத்திடம் சொல்லிவிட்டு வேலையிலிருந்து விலகியிருந்தேன். இவை எல்லாம் எனது தன்வரலாற்று நூலான போரின் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளன. இதை மையமாகக் கொண்டு யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

 Vijay Sethupathis film Yaadhum Oore Yaavarum Kelir is embroiled in a story plagiarism controversy

‘அந்தரம்’ நாவலில் மகன் காணாமல்போவதால் தவிக்கும் தாயின் கதை இருக்கிறது. படத்தில் காணாமல் போன தம்பியை அக்கா தேடுவதுபோல் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நான் மறைந்து வாழாமல் என்னைப் போரின் மறுபக்கத்தின் மூலம் ஏன் வெளிப்படுத்தினேன் என்பதைப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறேன். இவை திரைப்படத்தின் கடைசியில் பேசும் வசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதியை என்னிடமோ அல்லது புத்தகங்களை வெளியிட்ட காலச்சுவடு நிறுவனத்திடமோ பெறவில்லை. ஆகவே இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், பல்வேறு இன்னல்களுக்கிடையில் வாழ்ந்துகொண்டிருக்கும் அகதிகளின் துயரங்களைச் சொல்ல முனையும் படம் அத்தகைய அகதி ஒருவரின் படைப்பைத் திருடியிருப்பதன் மூலம் அகதிகளின் துயரம் பற்றிப் பேசுவதற்கான தார்மிக உரிமையை இழந்து நிற்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கு என மிக வேதனையுடன் தெரிவித்துள்ளார். அயோத்தி படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாரும் கேளிர் படமும் கதை திருட்டில் சிக்கியுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.