சென்னை: Ajith Helped Vikram (விக்ரமுக்கு உதவிய அஜித்) நடிகர் விக்ரமுக்கு அஜித்குமார் உதவிய சம்பவம் தெரியவந்து ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்தவர் நடிகர் விக்ரம். இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துவருகிறார். தனது கரியரின் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை.
இருப்பினும் சினிமாவை விட்டு ஒதுங்க விருப்பமில்லாத விக்ரம் பிற ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தார். சூழல் இப்படி இருக்க பாலாவின் முதல் படமான சேதுவில் நடித்தார் விக்ரம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆனது. இதனால் சினிமாவில் விக்ரம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டார்.
கமர்ஷியல் ஹிட்டடித்த விக்ரம்: சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விக்ரமுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இருப்பினும் எல்லா கதைகளிலும் நடிக்காமல் தன்னை நிரூபிக்கும் வகையில் உருவாகியிருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
ஒரு பக்கம் காசி, பிதாமகன் என நடிப்புக்கு தீனி போடும் படங்களிலும், மறுபக்கம் ஜெமினி, தூள், தில் என கமர்ஷியலுக்கு தீனி போடும் படங்களிலும் நடித்து இரட்டை குதிரையில் லாவகமாக பயணித்தார். இதனால் கரியரின் உச்சத்திற்கு சென்று இப்போது மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
விக்ரம் Vs பிரசாந்த்: நடிகர் பிரசாந்த் விக்ரமின் உறவுக்காரர் ஆவார். விக்ரமின் தாயும், பிரசாந்த்தின் தந்தையான தியாகராஜனும் உடன் பிறந்தவர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் விக்ரம் சினிமாவுக்குள் நுழைந்தபோது அவருக்கு பிரசாந்த்தோ, தியாகராஜனோ பெரிதாக உதவவில்லை எனவும் ஒரு பேச்சு உண்டு.
அதுமட்டுமின்றி இயக்குநர் பாலா எழுதிய ‘இவன்தான் பாலா’ என்ற புத்தகத்தில் , ‘சினிமாவில் இருக்கும் எனது உறவினர் என்னை பார்த்து ரொம்பவும் கேவலமாக பேசினார்’ என தன்னிடம் விக்ரம் கூறியதாக பாலாவும் குறிப்பிட்டிருக்கிறார். அதை படித்த பலரும் அந்த உறவினர் தியாகராஜன்தான் என கூறிவந்தனர்.
விபத்தை சந்தித்த விக்ரம்: சினிமாவில் தீவிரமாக போராடிய விக்ரம் ஒருமுறை விபத்தில் சிக்கி படுத்த படுக்கையானார். அந்த சமயத்தில் விக்ரமால் இனி நடமாடவே முடியாது. சொல்லப்போனால் எழுந்திருக்கவே முடியாது என பிரசாந்த்தும், அவரது தரப்பும் திரைத்துறையில் ஒரு செய்தியை உலாவவிட்டனர் என்ற தகவல் அந்த சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விக்ரமுக்கு உதவிய அஜித்: இந்தச் சூழலில் விக்ரமுக்கு அஜித் உதவிய தகவல் தெரியவந்திருக்கிறது. 1997ஆம் ஆண்டு ஜேடி & ஜெர்ரி உல்லாசம் கதையோடு அஜித்தை அணுகியிருக்கிறார்கள். அப்போது படத்தில் இன்னொருவர் நடிக்க வேண்டும். கொஞ்சம் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்தான் எனவும், அதில் விக்ரமை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாகவும் அஜித்திடம் கூறியிருக்கிறார்கள்.
என்னைப்போல்தான் அவரும்: அதனைக் கேட்ட அஜித்குமார், என்னைப்போல்தான் அவரும். ரொம்பவே போராடுகிறவர். எனவே அவரையே நடிக்க வையுங்கள். அவருக்கு ஸ்க்ரீன் ஸ்பேஸையும் அதிகப்படுத்துங்கள் என்றாராம். இதனை கேள்விப்பட்ட விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித்திடம், நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். அதற்கு அஜித்தோ, சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் ப்ரதர். நாளை நீங்கள் என்னைவிட பெரிய ஹீரோவாகவே மாறலாம் என வாழ்த்தியிருக்கிறார். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார்.