ஜம்மு காஷ்மீரில் ஜி 20 கூட்டம்.. \"நோ\" சொன்ன சீனா.. மீட்டிங்கிற்கு வர மறுப்பு.. ஏன் தெரியுமா?

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் நடக்கும் இந்த ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை புறக்கணிக்க சீனா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, சர்ச்சைக்குரிய பகுதியில் (ஜம்மு காஷ்மீரில்) இதுபோன்ற சந்திப்புகளை நடத்துவதை உறுதியாக எதிர்ப்பதாக தெரிவித்து இந்த நிகழ்வை புறக்கணித்து உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், “சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் பகுதியில் எந்த விதமான ஜி20 கூட்டங்களையும் நடத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அளித்த பதிலில், “சீனா போன்ற நாடுகள் வெளியிடும் இது போன்ற அறிக்கைகளை நாங்கள் தொடர்ந்து நிராகரித்து வருகிறோம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இந்த விஷயங்களில் எங்களின் தெளிவான நிலைப்பாட்டை நன்கு அறிவார்கள். ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கும். எப்போதும் இருந்து வந்துள்ளது.

இந்த பகுதிக்கும் வேறு எந்த நாட்டிற்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கருத்து தெரிவிக்க வேறு யாருக்கும் உரிமை இல்லை ” என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்தியா சீனா இடையே லடாக்கில் மோதல் நிலவும் நிலையில்தான்.. ஜம்மு காஷ்மீரில் இந்த கூட்டம் நடக்கிறது. கடந்த 2020ல் லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த மோதலை தொடர்ந்து கோர்கா – ஷாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது.

எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இரண்டு தரப்பில் இருந்தும் பல்வேறு மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ராணுவத்தின் பல்வேறு மட்ட அளவில் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாக நீடித்த நிலையில் பாங்காங் டிசோ ஏரி பகுதியில் இருந்து இரண்டு தரப்பும் படைகளை வாபஸ் வாங்கி முந்தைய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்றன.

ஆனால் இன்னும் ரோந்து பகுதிகளை முடிவு செய்வதில் அங்கே குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

துருக்கியும் இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதை துருக்கி எதிர்த்து வரும் நிலையில் அந்த நாடும் இந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ளது.

கூட்டம் பின்னணி:ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஜி 20 சுற்றுலா குழு கூட்டம் நடக்க உள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்ட பின் அங்கு நடக்கும் முதல் சர்வதேச நிகழ்வாகும் இது. பெரும் பாதுகாப்பிற்கு இடையில் 20 நாட்டு தலைவர்கள் இன்று நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.மே 24ம் தேதி வரை இந்த கூட்டம் நடக்க உள்ளது.

China is boycotting G 20 Tourism meeting in Jammu Kashmir capital Sri Nagar

இந்த கூட்டம் காரணமாக ஸ்ரீநகர் முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கே ராணுவம், போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தால் ஏரியின் கரையில் உள்ள ஷெரி காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (SKICC) இந்த கூட்டம் நடைபெறும். G20 நாடுகளைச் சேர்ந்த 60 பேர் உட்பட 180க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி 20 நாடுகளின் சுற்றுலா துறை அமைச்சர்கள், அதிகாரிகள், தலைவர்கள், பிரதிநிதிகள் இந்த கூட்டத்திற்கு வருவார்கள். இந்த குழுவின் கடைசி சந்திப்பு அடுத்த மாதம் கோவாவில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.