நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை: துவாரகா 2024 ஏப்ரலில் தயாராகிவிடும் – மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: நாட்டின் முதல் 8-வழி விரைவு சாலை, துவாரகா அடுத்தாண்டு ஏப்ரலில் தயாராகிவிடும் என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாட்டின் முதல் 8 வழி விரைவு சாலை ரூ.9,000 கோடி செலவில் கட்டப்படுகிறது. 34 மீட்டர் அகலம் உள்ள இந்த விரைவுச் சாலை ஒரு தூண் பாலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த விரைவுச் சாலை ஹரியானாவில் 18.9 கி.மீ தூரத்துக்கும், டெல்லியில் 10.1 கி.மீ தூரத்துக்கும் அமைக்கப்படுகிறது. இந்தப் பணி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்யப்படும். இதன் மூலம் டெல்லி குருகிராம் விரைவு சாலையில் (என்எச் 48) போக்குவரத்து நெரிசல் குறையும். சிவமூர்த்தி என்ற இடத்தில் தொடங்கும் துவாரகா விரைவுச் சாலை கெர்கி தவுலா டோல் கேட்டில் முடிவடையும்.

இந்த விரைவு சாலையில் 4 விதமான சாலைகள் அமைக்கப்படுகின்றன. மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், குகைப் பாதைகள், உயரமான சாலைகள் போன்றவை இந்த விரைவுச் சாலையில் இடம்பெற்றுள்ளன. விரைவுச் சாலைக்கு இரு புறமும், 3 வழி சர்வீஸ் சாலைகள் கட்டப்படுகின்றன. இந்த விரைவுச் சாலையில் ஐடிஎஸ் (Intelligent Transport System) எனப்படும் நவீன வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த போக்குவரத்து அனுபவம் சிறந்ததாக இருக்கும். இந்த விரைவுச் சாலையில் 3.6 கி.மீ தூரத்துக்கு 8 வழி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

இந்த விரைவுச்சாலை துவாரகா – இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இடையே இணைப்பை மேம்படுத்தும். குருகிராம் பகுதியுடனும் இந்த விரைவுச் சாலை இணைப்பை ஏற்படுத்தும். துவாரகா விரைவுச் சாலையில் 29.6 கி.மீ தூரத்துக்கு சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டேன்.

டெல்லி- குருகிராம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இந்த விரைவுச் சாலை அமைக்கப்படுகிறது. இந்த புதிய விரைவு சாலை நொய்டா முதல் டெல்லி-மும்பை விரைவுச் சாலை இடையே பயண நேரத்தை 3 முதல் 4 மணி நேரம் குறைக்கும். சாலையில் முழுவதும் தானியங்கி முறையில் செயல்படும் டோல் வரி இயந்திரங்கள் உள்ளன. இதில் வாகனங்கள் ஜிபிஎஸ்- உடன் இணைக்கப்பட்டு டோல் கட்டணம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த சாலை அமைக்க 2 லட்சம் டன் எஃகு பயன்படுத்தப்படுகிறது. 2 மில்லியன் கியூபிக் மீட்டர் கான்கிரீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்துக்காக, நாட்டில் முதல் முறையாக, விரைவுச்சாலை வழித்தடத்தில் இருந்த 12,000 மரங்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.