தாய்க்காக கிணறு தோண்டிய 14 வயது சிறுவன்

பால்கர்: மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம் கெல்வே கிராமத்தில் ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். விவசாய தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கடைசி மகன் பிரணவ் சல்கர் (14) 9-ம் வகுப்பு படிக்கிறார். பிரணவ் சமீபத்தில் சூரிய மின்சக்தி தகடுகளை, மோட்டார் சைக்கிள் பேட்டரியில் இணைத்து, தனது குடிசையில் விளக்கெரிய வைத்தான்.

இந்நிலையில், தனது தாய் நீண்ட தூரம் சென்று ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்துள்ளான். கடப்பாரை, மண்வெட்டி, சிறு ஏணி ஒன்றை தயார் செய்து வீட்டு முற்றத்தில் கிணறு வெட்டும் பணியில் தனியாக களம் இறங்கினான். கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிணறு தோண்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டான். உணவு சாப்பிடுவதற்காக 15 நிமிடங்கள் மட்டும் ஓய்வெடுத்தான். அதன்பின் நாள் முழுவதும் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டான்.

20 அடி ஆழம் தோண்டியதும் கிணற்றில் தண்ணீர் வந்தது. இதைப் பார்த்த பிரணவ் மகிழ்ச்சியடைந்தான். இந்த கிணறு தற்போது பிரணவ் குடும்பத்தின் பெருமையான சொத்தாக மாறியுள்ளது. இந்த கிணற்றை பார்க்க கெல்வே கிராமத்துக்கு பலர் வந்து செல்கின்றனர். பிரணவின் பள்ளி ஆசிரியரும், நேரில் வந்து கிணற்றை பார்வையிட்டு சென்றார். பிரணவின் சாதனையை பாராட்டிய கெல்வே கிராமத் தலைவர், பிரணவ் வீட்டுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.