தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர், வெங்கட் பிரபு. தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபுவின் வருகை குறிப்பிடத்தக்க ஒன்று.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. சென்னை 28 படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான வெங்கட் பிரபு தன் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். தன் முதல் படத்திலேயே முத்திரை பதித்து இன்று தமிழின் முன்னணி இயக்குநராக வலம்வரும் வெங்கட் பிரபுவின் திரைப்பயணம் குறித்த ஒரு பார்வை.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் இயக்குநருமான கங்கை அமரனின் மகன் என்பதால் மட்டுமே, தமிழ் திரையுலகில் இத்தகைய வாய்ப்பும் அடையாளமும் கிடைக்கவில்லை.
இயக்குநராக அவதாரம் எடுப்பதற்கு முன்பு, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பின்னணி பாடகராகவும் இசைக் கலைஞராகவும் சில காலம் பணியாற்றி வந்தார். 1996 ஆம் ஆண்டில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், எஸ்.பி.பி சரண், தமன், யுவன் சங்கர் ராஜா மற்றும் யுகேந்திரன் இவர்கள் இணைந்து பல இசைக் கச்சேரிகளை நடத்தினர். அதே 1996 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான நடிப்பில் வெளியான ‘அலெக்சாண்டர்’ என்ற திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்தார். இதில் ‘கூத்தடிச்சி’ என்ற பாடலை வெங்கட் பிரபு பாடியிருந்தார்.
அதற்குப் பிறகு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘உல்லாசம்’ திரைப்படத்திலும் ஒரு பாடலைப் பாடினார். இது மட்டுமில்லாமல் பல படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றிக்கொண்டு வந்தார். கார்த்திக் ராஜா இசையில் பல பாடல்களுக்கு ட்ராக் பாடகராக பணியாற்றினார்.
1996 ஆம் ஆண்டு, தனது தந்தையின் இயக்கத்தில் ‘பூஞ்சோலை’ என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக வெங்கட் பிரபு நடித்தார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தார். படமும் நிறைவடைந்தது, பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால், படம் வெளியாவதில் பல பிரச்னைகள் எழுந்தன. அந்தப் படம் வெளியாகவில்லை. மீண்டும், சில காலம் இசைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
2002 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்குநராக அறிமுகமாகிய ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இதில் ‘நெருப்பு கூத்தடிக்குது’ என்ற பாடலைப் பாடினார். இந்த பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே 2002 ஆம் ஆண்டு, ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். 2003-ல் சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். 2004-ல் சமுத்திரக்கனி இயக்கத்திலும் விஜயகாந்த் நடிப்பிலும் வெளியாகிய `நெறஞ்ச மனசு’ என்ற திரைப்படத்திலும், 2005-ல் ‘மழை’ திரைப்படத்திலும் துணை நடிகராக நடித்தார்.
அதே 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சிவகாசி’ திரைப்படத்திலும், அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘ஜி ‘ திரைப்படத்திலும் நடித்தார்.
பிரபலமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனக்காக அடையாளத்தை தேடுவதில் வெங்கட் பிரபு எந்தவொரு தயக்கத்தையும் கொண்டதில்லை. பாடகர், இசைக் கலைஞர், நடிகர் என ஒவ்வொரு துறையிலும் பங்களிப்பைச் செய்துவந்தவர். அடுத்து இயக்குநராக அறிமுகமானார்.
யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாமல் தன் முதல் படத்தை இயக்கினார். ‘சென்னை 600028’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது. ‘சென்னை 600028’ திரைப்படத்தை வெங்கட் பிரபுவின் நண்பரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனுமான எஸ்.பி.பி சரண் தயாரித்திருந்தார். பின்னணி இசையில், இவரின் தம்பிகளான பிரேம்ஜி அமரன் மற்றும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பட்டையைக் கிளப்பியிருந்தனர். இந்த நான்கு வாரிசுகளும் இணைந்து உருவாக்கிய இந்த திரைப்படம், திரையரங்கை சிரிப்பலையில் குலுங்க வைத்தது. காதல், நட்பு, கொண்டாட்டம், காதல் தோல்வி, நட்பு முறிவு, நிறைய காமெடி இதோடு சேர்த்து கிரிக்கெட் என இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து தமிழ் திரையுலகிற்கு ஒரு புதிய மசாலாவைக் கொடுத்தார் வெங்கட் பிரபு. (இந்த திரைப்படத்திற்கு, 2008 ஆம் ஆண்டில் சிறந்த திரைக்கதைக்கான ஆனந்த விகடன் சினிமா விருதைப் பெற்றார்.)
இதே ஃபார்முலா அடுத்தடுத்த திரைப்படங்களிலும் தொடர்ந்தது. அடுத்து 2008 ஆம் ஆண்டு சரோஜா திரைப்படம் வெளியாகியது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதிலும் வெங்கட் பிரபுவின் சிக்னேச்சர் ஸ்டைல் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றது. அடுத்ததாக இரண்டு வருடங்களுக்கு பிறகு, 2010 ஆம் ஆண்டில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் தயாரிப்பில் மீண்டும் ஒரு ஜாலியான கதைக்களம். இந்த முறை அதே ஃபார்முலாவில் ‘கோவா ‘ திரைப்படம் வெளியாகியது. இது கலவையான விமர்சனங்களையும், ஓரளவு வசூலையும் குவித்தது. கிட்டத்தட்ட இந்த மூன்று படங்களும் ஒரு வகையில், வெங்கட் பிரபுவின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (VKCU) தான்.
இந்த படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் மீது விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இந்த முறை அனைவரின் புருவங்களையும் உயர்த்தும் வகையில், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்தை வைத்து அவரது 50வது படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியது.
`மங்காத்தா’ திரைப்படம் அதுவரை பார்த்திடாத புது அஜித்தை ரசிகர்களுக்குக் காட்டியது. இத்திரைப்படம் A,B,C என ஆல் சென்டர்களிலும் பிளாக் பஸ்டர் ஹிட். அஜித்தின் கரியரில் இது இமாலய வசூலை வாரிக் குவித்தது. இந்த மாஸ் மசாலா ஹீரோயிசம் ஃபார்முலா வெற்றியடைந்ததால், இதைப் போலவே அடுத்த படங்களை எடுக்க ஆரம்பித்தார். அடுத்து 2013 ஆம் ஆண்டில் கார்த்திக் நடிப்பில் ‘பிரியாணி’ திரைப்படம் வெளியாகியது. இது கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அடுத்த படமும் ஹீரோவுக்காக எடுக்கப்பட்ட படம் தான். இந்த முறை சூர்யா நடிப்பில் ‘மாசு என்கிற மாசிலாமணி ‘ 2015 ஆம் ஆண்டு வெளியானது. காஞ்சனா, அரண்மனை என பேய் சீரிஸ்கள் வெளிவந்து வசூலை அள்ளிய காலகட்டம் அது. அப்போது பேய்+காமெடி+மாஸ் ஆக்சன் என இந்த ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட படம். ஆனாலும் இந்த பேய் படம் வொர்க் அவுட் ஆகவில்லை. இந்த படத்தில் கடும் விமர்சனத்தை சந்தித்தார், வெங்கட் பிரபு. மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்முலாவைக் கையில் எடுத்தார்.
இந்த முறை ‘சென்னை 600028 பார்ட் – 2’ தன்னுடைய முதல் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுத்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும், தோல்வியாக அமைந்தது. முதல் பாகத்தில் இருந்த பல பாசிட்டிவ் விஷயங்கள் இந்த பாகத்தில் இல்லை. இதற்கு அடுத்து, மீண்டும் தன்னுடைய நம்மவர்களை வைத்து ‘பார்ட்டி’ என்ற திரைப்படத்தை இயக்கினார், வெங்கட் பிரபு. இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட நீண்ட இடைவெளிக்கு பின்னர், 2021 ஆம் ஆண்டில் ‘குட்டி ஸ்டோரி ‘ என்ற ஆந்தாலாஜியில் “லோகம்” என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கினார். இந்த முறை, ‘சிம்பு நடிப்பில் மறுபடியும் ஹீரோயிசம் கலந்த மாஸ் மசாலா படம்’ என எல்லோரும் நினைத்து கொண்டிருந்தனர். ஆனால் வெங்கட் பிரபு ஆடிய ஆட்டம், மிரள வைக்கும் ஆட்டம். அனைவரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சும் அளவிற்கு டைம்-லூப் கதை. மாநாடு திரைப்படம் நூறு கோடி வசூலை அள்ளியது. சிம்புவின் மார்க்கெட்டையும் உயர்த்திப் பிடித்தது. விறுவிறு திரைக்கதை, வித்தியாசமான எடிட்டிங், மிரட்டலான பின்னணி இசை என அனைத்தும் அற்புதம். ரசிகர்களும் கோடம்பாக்கமும் வெங்கட் பிரபுவை கொண்டாடித் தீர்த்தது. மாநாடு படத்திற்கு பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டில் அடல்ட் காமெடி கதையாக, அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மத லீலை’ திரைப்படம் வெளியானது. இதுவும் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நாக சைதன்யா நடிப்பில் ‘கஸ்டடி’ என்ற திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், நேற்று ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் அடுத்த படத்தை, வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்திற்கு #Thalapathy68 என பெயரிடப்பட்டுள்ளது. வழக்கம் போல, வெங்கட் பிரபுவின் அனைத்து படத்திற்கும் இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, தளபதி 68-லும் இசையமைக்கவுள்ளார்.
வாழ்த்துக்கள் வெங்கட் பிரபு சார்..!
தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திற்கு தனது தம்பிகளான பிரேம்ஜி அமரன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரையும் சேர்த்து வேலைப் பார்த்து வருகின்றார். இந்த ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’ என்பது இவர்களுக்கு தான் சரியாக பொருந்தும்.
மேலும், ஒவ்வொரு படத்திலும் தனது சிக்னேச்சர் ஸ்டைலில் ஒரு தலைப்பு ஒன்றை வைத்து விடுவார். அந்த வரிசையில் A Venkat Prabhu Game, Sixer, Reunion, Politics, Diet, Holiday, Hangover, Quickie, Hunt என பல வெரைட்டிகள் உள்ளன. இது போல, #Thalapathy68 படத்திற்கு என்ன தலைப்பு வைப்பார் என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!