அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மஸ்தானை நீக்குமாறு ஆளுநரிடம் அண்ணாமலை நேரில் மனு

சென்னை: கள்ளச் சாராய உயிரிழப்பு விவகாரத்தில் செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை மனு அளித்துள்ளார்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ மற்றும் பாஜக மகளிர் அணியினர் நேற்று சந்தித்தனர். அப்போது, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் ஆகியோரை நீக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

கள்ளச் சாராய உயிரிழப்புகள், விற்பனை, டாஸ்மாக் ஆதிக்கம் குறித்து ஆளுநரிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். கள்ளச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான மரூர் ராஜா, அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிகவும் நெருக்கமானவர். தொடர்ந்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டாலும், அமைச்சர் உடனான செல்வாக்கால், பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் தனது சாராய விற்பனையை தொடர்ந்து வந்திருக்கிறார்.

எனவே, அமைச்சர் செஞ்சி மஸ்தானையும், இதை தடுக்கதவறிய மதுவிலக்கு, ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில்பாலாஜியையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு முதல்வரிடம் ஆளுநர் அறிவுறுத்த வேண்டும்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியும், அவருக்கு நெருக்கமானவர்களும், போக்குவரத்து துறையில் பணி வழங்குவதற்காக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பதவிப் பிரமாணத்துக்கு எதிராக..

ஏற்றுக்கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு எதிராக செந்தில்பாலாஜியின் நடவடிக்கை இருக்கும்போது, முதல்வரிடம் ஆளுநர் வலியுறுத்தி, அமைச்சர் பதவியில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொள்ள காவல் துறைக்கு முழு சுதந்திரம் தரவேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. அதை காப்பாற்ற, ஆளுநர் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். இந்த வழக்கில் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது.

15 நாளில் வெள்ளை அறிக்கை

டாஸ்மாக் இல்லாமல் அதே வருமானத்தை எப்படி கொண்டுவர முடியும் என்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வரிடம் தமிழக பாஜக இன்னும் 15 நாட்களில் வழங்க இருக்கிறது. தமிழகத்தில் மீண்டும் ‘கள்’ இறக்குவதற்கு தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும். முதல்வரிடம் வழங்கப்பட உள்ள வெள்ளை அறிக்கையில் இதுவும் இடம்பெற்றுள்ளது. கள் இறக்குவதை ஊக்குவித்தால், அரசுக்கு வரக்கூடிய வருமானம் பற்றியும் அதில் முழுமையாக தெரிவித்துள்ளோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, காவல் துறையை மட்டுமின்றி, அரசு வழக்கறிஞர் அலுவலகத்தையும் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.