ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டிற்கு இடையே, பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பானிலிருந்து புறப்பட்டு பப்புவா நியூ கினியாவின் தலைநகா் போா்ட் மோா்ஸ்பிக்கு (ஞாயிற்றுக்கிழமை) நேற்று இரவு வந்தடைந்தாா். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், பசி, வறுமை மற்றும் சுகாதாரம் தொடர்பான சவால்கள் ஏற்கெனவே இருந்த நிலையில், கோவிட் -19 தொற்றுநோய்களின் போது உலகளாவிய நாடுகளில், தெற்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
உரம், மருந்து விநியோகத்தில் தடைகள் ஏற்படுவதைக் காண்கிறோம். ஆனால், கடினமான காலங்களில் இந்தியா தனது, நட்பு பசிபிக் நாடுகளுக்கு ஆதரவாக நின்றதில், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நாங்ககள் நம்பிய நாடுகள் எங்களுக்கு தேவைப்படும்போது, எங்களோடு துணையாக நிற்கவில்லை” எனத் தெரிவித்தார். அதோடு வளர்ந்த நாடுகளை கடுமையாகச் சாடியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, பப்புவா நியூ கினியாவின் பிரதமர் ஜேம்ஸ் மராபே, உலகளாவிய மேடையில் இந்தியாவின் தலைமையைப் பாராட்டினார், மேலும், அவர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். “உலகளாவிய மன்றங்களில் இந்தியா தலைமைக்குப் பின்னால் நாங்கள் அணிதிரள்வோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
பப்புவா நியூ கினியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.