மே மாதம் நிறைவடைய இன்னும் சில நாள்களே உள்ளன. கோடை சீசனைக் கொண்டாடக் கோடை வாசஸ்தலங்களை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரான ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஏப்ரல் மாத இறுதியிலிருந்தே பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது என்றாலும், நீலகிரி கோடை விழாவின் மிக முக்கிய விழாவான 125வது ஊட்டி மலர் கண்காட்சியைக் காண வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வந்து கொண்டிருப்பது அங்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தின் பல இடங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் நிலவுகிறது.
குளுகுளு ஊட்டியில் சில நாள்களாகக் கூடுதல் குளிரைக் கொடுத்து வரும் கோடை மழையிலும் பயணிகள் கூட்டத்தால் பூங்காக்கள் நிரம்பி வழிகின்றன. தனியார் மற்றும் அரசின் தங்கும் விடுதிகள் அனைத்தும் புக்கிங் ஃபுல் என்பதால், எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் தங்குமிடங்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரூம் புக்கிங் கன்ஃபார்ம் பண்ணாமல் ஊட்டிக்கு வர வேண்டாம் எனச் சுற்றுலா வழிகாட்டிகள் சிலர் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
கூட்ட நெரிசல் குறித்து நம்மிடம் பேசிய நீலகிரி சுற்றுலா வழிகாட்டிகள் சிலர், “பல ஆண்டுகளுக்குப் பின் நடப்பு ஆண்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்ய முயற்சி செய்யும் பலரும் ரூம் ஃபுல் என்றதும் ஊட்டிக்குச் சென்று நேரில் பார்த்துக் கொள்ளலாம் எனக் குடும்பத்துடன் வந்துவிடுகிறார்கள். கடைசி நேரத்தில் ரூம் தேடுவது என்பது சீசன் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் சாத்தியமில்லை. ஒருவேளை அலைந்து திரிந்து ரூம் போட்டாலும் வழக்கத்தை விட 3, 4 மடங்கு கூடுதல் கட்டணம் கேட்பார்கள். எனவே ரூம் புக்கிங் கன்ஃபார்ம் செய்யாமல் ஊட்டிக்கு வர வேண்டாம்” என்றனர்.